சர்வதேச பொருளாதார காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ரூபாயை விரைவில் தொட்டுவிடும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2017 முதல் அமெரிக்க டாலரின் மதிப்பு சீரான முறையில் உயர்ந்து கொண்டே வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு மே 16ம் தேதி இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவு வீழ்ச்சி அடைந்து ரூ.68.13-ஆக இருந்தது.
இதனிடையே, சர்வதேச அரசியல் பொருளாதார காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு விரைவிலேயே ரூ.70-ஆக அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான டாப்-5 காரணங்கள்
1) 2014 நவம்பருக்கு பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலர்கள் என்ற நிலையை நெருக்கி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டதை அடுத்து, தேவை அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் வர்த்தகம் அமெரிக்க டாலர்களின் அடிப்படையில் நிகழ்வதால் அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தவிர்க்க இயலாதது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
2) எரிபொருள் விலை உயர்வு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஏப்ரல் மாதத்தில் நாட்டின் சில்லறை மற்றும் மொத்த பணவீக்கம் அதிகரித்துள்ளது. இது ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
3) கடந்த ஆண்டு 13.25 பில்லியன் டாலர்களாக இருந்த நாட்டின் வணிகப் பற்றாக்குறை 13.72 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. 80 விழுக்காடு அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவிற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ரூபாயின் மதிப்பில் பிரதிபலிக்கும்.
4) அமெரிக்க கடன் பங்கு பத்திரங்களின் மதிப்பும் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் 6 முக்கிய நாடுகளின் அமெரிக்க டாலருக்கு நிகரான பண மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.
5) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய கடன் பத்திரங்களில் இருந்து சுமார் ரூ.22,336 கோடியை திரும்ப எடுத்துள்ளனர். இதேபோல், நாட்டிலிருந்து வெளியேறும் உள்நாட்டு மூலதனமும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.