வியாழன், 17 மே, 2018

தூக்கத்தை தூண்டும் உணவு பொருட்கள்! May 17, 2018

Image

உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது தூக்கம். தூக்கமின்மையால், பலவிதமான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

பொதுவாக, ஒரு மனிதனுக்கு 8 மணி நேர தூக்கம் அவசியம். 8 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ரத்த அழுத்தத்திற்கும் தூக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலர், தூங்குவதற்காக, தூக்கமாத்திரைகள் சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை செய்வர். ஆனால் இயற்கையாகவே சில உணவு பொருட்கள், தூக்கத்தை தூண்டும். அவை,

1. சூடான பால்:

ஆயுர்வேத மருத்துவத்தின்படி, சூடான பால், தூக்கத்தை தூண்டும் உணவு என்று நம்பப்படுகிறது. பாலில் உள்ள ட்ரிப்டோபான் என்ற அமிலம், மூளையில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்துவதால், நன்றாக தூங்குவதற்கு உதவுகிறது. இஞ்சி கலந்த பாலும் தூக்கத்தை தூண்டுவதாக இருக்கிறது.

2.செர்ரி:

செர்ரியில், மெலடோனின் இருப்பதால் தூக்கத்தை ஏற்படுத்தும் அணுக்களை தூண்டுகிறது. மன அழுத்தத்தை குறைக்கவும் செர்ரிப்பழம் உதவுகிறது. ஒரு நாளைக்கு 10ல் இருந்து 12 செர்ரி பழம் சாப்பிட்டால், இரவு நன்றாக தூக்கம் வரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

3.பாதாம்:

மூளையின் செயல்திறனை அதிகரிப்பதற்கு பாதாம் உதவியாக இருந்தாலும், நன்றாக தூங்குவதற்கும் உதவியாக இருக்கிறது. பாலில் இருப்பது போலவே, பாதாமிலும் ட்ரிப்டோபான்  இருப்பதால், தூக்கத்தை தூண்டுகிறது. தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிடுவது, தூக்கத்தை ஏற்படுத்தும்.

4.சாக்லேட்: 

தூக்கத்தை துண்டும் உணவு வகைகளில் சாக்லேட் முக்கிய பங்கு வகிக்கிறது. மூளை மற்றும் நரம்பில் உள்ள தூக்கத்தை ஏற்படுத்தும் அணுக்களை தூண்டுகிறது. ஆனால், அதிகமான அளவில் சாக்லேட் உண்ணக்கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

5.வாழைப்பழம்:

தூக்கத்தை தூண்டுவதில் வாழைப்பழமும் உதவியாக இருக்கிறது. தசைகளை ஆசுவாசப்படுத்தும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் தூக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் வாழைப்பழம் இயற்கையாகவே தூக்கத்தை தூண்டுகிறது.

6.ஓட்ஸ்:

உடல் எடையை குறைப்பதற்கு உதவியாக இருக்கும் ஓட்ஸ், மனிதன் தூங்குவதற்கும் உதவுகிறது. ஓட்ஸ் உடன், சிறிது தேன் கலந்து சாப்பிடுவதன்மூலம், ஒருவர் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.