3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இணைய சேவையை தடை செய்யக்கூடாது எனக்கோரி, சூரிய பிரகாசம் என்ற வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், போராட்டத்தின்போது காயம் அடைந்தவர்களை அடையாளம் காண மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் நீதிபதி பவானி சுப்பராயன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.