கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்கும் முடிவு மிகவும் கடினமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நாட்டு மக்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்த விவகாரங்களுள் ஒன்று கர்நாடக மாநிலத்துக்கான தேர்தல் முடிவுகள்.
பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவிய கர்நாட்காவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக எதிரும் புதிருமாக போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன.
இக்கூட்டணி அமைய பெரும் முயற்சியை மேற்கொண்டதோடு, எம்.எல்.ஏக்கள் கட்சி மாறாமல் தடுத்தவர்களுள் மிக முக்கியமானவர்களுள் ஒருவரான முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி குறித்து பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த கேள்வி பதில் உரையாடலை தற்போது பார்க்கலாம்.
உங்களுடைய கட்சி இறக்கங்களை சந்தித்த போதெல்லாம் நீங்கள் கட்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளீர்கள். இதன் மூலம் கர்நாடகாவில் கட்சியின் நம்பிக்கையை பெற்ற தலைவராக மாறியுள்ளீர்களா?
நான் மட்டும் அல்ல, எப்போதும் ஒருவரே அத்தனையையும் செய்துவிட முடியாது. என்னுடைய 35 வருட அனுபவம் மற்றும் 7 முறை பெற்ற தொடர்ச்சியான வெற்றி, எம்.எல்.ஏக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளைகளை புரிய வைத்துள்ளது. அவர்களை ஒற்றுமையாக ஒருங்கிணைக்கவும் இதுவே உதவியது.
கடந்த முறை காங்கிரஸுக்கு உதவும் போது, உங்களுடைய விட்டில் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டது, இந்த முறை அதே போல ஏதாவது நடக்கலாம் என்ற கவலை உங்களிடம் உள்ளதா?
எதுவும் நடக்கலாம். ஐடி ரெய்டு இந்த முறை நடக்க வாய்ப்பில்லை, அது ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டது. இந்த முறை வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அனந்த் சிங் என்ற எம்.எல்.ஏ நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வருவாரா இல்லையா என்று சந்தேகம் எழுந்த நிலையில், அவரை எப்படி உங்களால் சரிசெய்ய முடிந்தது?
அவர் பாரதிய ஜனதாவில் இருந்து காங்கிரஸுக்கு அழைத்து வந்ததே நான் தான். அவர் பாஜகவில் இருந்த போதே நாங்கள் நண்பர்கள். அவரிடம் கடந்த சனிக்கிழமை ( பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்ட தினம்) பேசினேன். அவர் ஒரு காங்கிரஸ்காரர் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறிவந்தேன்.
இந்த தேர்தலில் உங்கள் கட்சி மோசமான நிலையை சந்தித்திருப்பதாக நினைக்கிறீர்களா?
எங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான சீட்களே கிடைத்ததை ஒப்புக்கொள்கிறோம், அதிலும் வோக்கலிகா மக்கள் வாழும் பகுதியில் ஓட்டுக்கள் குறைந்துள்ளன. இது தான் நடக்கும் என்பதை கட்சியின் தலைமைக்கு முன்னதாகவே தெரிவித்து, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தினேன். இருப்பினும் அவர்கள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை கொண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் நீங்கள் தேவகவுடா மற்றும் குமாரசாமியை அதிகமாக தாக்கிப் பேசியிருக்கிறீர்கள். இந்த கூட்டணி குறித்து?
இது மிக மிக கடினமான முடிவாகவே இருந்தது, ஏனெனில் எங்கள் கட்சியின் தொண்டர்கள் ராமநகரா, செண்னபட்னா, மாண்டியா, மைசூரு மற்றும் ஹசன் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினரின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் கடுமையாக உழைத்தனர், தற்போது அவர்களுடனே கூட்டணி ஏற்பட்டதால், அது தொண்டர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை அறிவேன். என்னுடைய குடும்பத்தினருக்கும் கூட இது சங்கடத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த குமாரசாமியின் ஆட்சியில் எங்கள் குடும்பத்தினருக்கு எதிராக அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் தேசத்தின் நன்மைக்காக என்னுடைய விருப்பு வெறுப்புகளை தூக்கி எரிய வேண்டும்.
பல்வேறு காங்கிரஸ் தொண்டர்களும் நீங்கள் மாநிலத் தலைவராக வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்களே. எப்படி உணர்கிறீர்கள்?
அதற்கு இன்னமும் காலம் கணியவில்லை. இதற்கு முன்னதாக ஒரு வாய்ப்பு இருந்தது, அப்போது அது நடந்திருந்தால் கர்நாடகாவின் அரசியல் நிலை தலைகீழாக மாறியிருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.
ஆதாரம்: https://www.hindustantimes.com/india-news/decision-to-align-with-jd-s-very-hard-says-karnataka-congress-leader-dk-shivakumar/story-yjQgLyt7KrsQUXp3SaGF6K.html?utm_source=inshorts&utm_medium=referral&utm_campaign=fullarticle