தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் 100வது நாளை எட்டியது. இதற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக பண்டாரம்பட்டி, மடத்தூர், உள்பட 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று பேரணி நடத்தினர். 144 தடை உத்தரவையும் மீறி முன்னேறியதால், அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்களை ஒடுக்க கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.
ஒரு கட்டத்தில் அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸாரின் தடியடியை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். வாகனங்களை கவிழ்த்து சேதப்படுத்திய அவர்கள், சில வாகனங்களை தீ வைத்து எரித்தனர். போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறிய நிலையில், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதனால் தூத்துக்குடி முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.