வியாழன், 31 மே, 2018

இந்தியாவின் கேப்டவுன் ஆகிறதா சிம்லா?! May 31, 2018

சுற்றுலா தலமான சிம்லாவில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அன்றாட குடிநீர் தேவைக்கே அப்பகுதி மக்கள் அல்லாடி வருகின்றனர். இதற்கான காரணம் என்ன? குடிநீர் பற்றாக்குறையால் சிம்லா மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை பற்றிய தொகுப்பு.

சிம்லா... இந்த பெயரை கேட்டதும் ஒவ்வொருவர் மனதிலும், நினைவுக்கு வருவது பனி படர்ந்த சாலைகளும், பனிகட்டிகளின் ஊடே விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகளும் தான். ஆனால் சிம்லாவின் இன்றைய நிலை என்ன தெரியுமா.

கேப்டவுன்... ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் போகும் உலகின் முதல் பெருநகரம் என்ற அறிவிப்பு வெளியானதும் உலகமே ஒரு நிமிடம் நடுங்கி போனது. அப்படி ஒரு நிலையை நோக்கி சிம்லாவும் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனையின் உச்சம்.

சிம்லாவிற்கு தண்ணீர் வழங்கும் ஆறுகள் அனைத்தும் இந்த ஆண்டு வறண்டு விட்டன. போதிய தண்ணீர் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 

குடிநீர் வழங்க நடவடிக்கை எடுங்கள் என நீதிமன்றம் தலையிடும் அளவிற்கு சிம்லாவின் நிலை மாறி போய் உள்ளது. கார்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யாதீர்கள் என அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், முக்கிய பிரமுகர்களுக்கு லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதைவும் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. 

தண்ணீர் தட்டுபாடு சிம்லாவின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் சரித்துள்ளது. சுற்றுலாவையே நம்பி உள்ள சிம்லாவிற்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டாததன் விளைவு, அங்குள்ள தொழில்கள் அனைத்தும் நலிவடைந்துள்ளன. ஆனால் அதை பற்றி எல்லாம் கவலைபட சிம்லா பகுதிவாசிகள் தயாராக இல்லை. எங்களின் முதல் தேவை தண்ணீர் என்பது மட்டுமே சிம்லாவின் ஒட்டு மொத்த குரலாக மாறியுள்ளது. 

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யுங்கள் எனக்கோரி சிம்லாவில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். 

தண்ணீர் லாரி வரும் போது, கையில் கிடைத்த பொருட்களுடன் நீண்ட வரிசையில் காத்து நிற்பதும், ஒரு லாரி தண்ணீரை விநியோகிக்க சுமார் 70 போலீசார் காவலுக்கு நிற்பதும், சிம்லாவின் இன்றைய நிலையை படம் பிடித்து காட்டும் கண்ணாடி

சிம்லாவில் வசிக்கும் மக்களுக்கே தண்ணீர் இல்லை. அதனால் தயவு செய்து சுற்றுலா பயணிகள் யாரும் இங்கு வர வேண்டாம். வேறு பகுதிகளுக்கு செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் அப்பகுதியில் வாழும் மக்கள்...

இந்த நிலையை மாற்ற அரசு முயல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தாலும், நீர் ஆதாரங்களை காக்க மக்களும் முன்வாருங்கள் என்ற முழக்கம் சிம்லாவில் வலுத்து வருகிறது. இன்று நாங்கள்.. நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என ஒட்டு மொத்த இந்தியாவையும் எச்சரிக்கின்றனர் சிம்லாவாசிகள்.