வியாழன், 17 மே, 2018

​காங்கிரஸுடன் கூட்டணி ஏன்? - குமாரசாமி விளக்கம்! May 16, 2018

Image

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தியது ஏன் என்பது குறித்து குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடக தேர்தலில், 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான 112 இடங்களை பெற அக்கட்சி தவறிவிட்டது.

அங்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 78 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, 38 இடங்களை மட்டுமே பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரான குமாரசாமியை முதல்வராக்க சம்மதித்த நிலையில், அந்த இருகட்சிகளுக்குமிடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது.

ம.ஜ.தவுடன் கூட்டணி ஏற்படுத்துவது தொடர்பாக பாஜக முயற்சித்த நிலையில், பாஜகவுடன் எக்காரணம் கொண்டும் கூட்டணி கிடையாது என குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2004-05 ஆம் ஆண்டுகளில் பாஜகவுடன் தனது தந்தை தேவகவுடா கூட்டணி ஏற்படுத்தியிருந்ததால் அவருடைய அரசியல் வாழ்வில் கரும்புள்ளி ஏற்பட்டிருந்தது, இதனை தற்போது போக்கவே கடவுள் தனக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுத்திருப்பதாகவும், அதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இணைந்திருப்பதாகவும் குமாரசாமி கூறினார்.

மேலும், அணிமாறுவதற்காக தனது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு 100 கோடி ரூபாய் வரை அளிக்க பாஜக பேரம் பேசிவருவதாகவும் கூறிய குமாரசாமி, தங்கள் கட்சியில் இருந்து ஒரு எம்.எல்.ஏவை இழுத்தால், பதிலுக்கு பாஜகவில் இருந்து 2 எம்.எல்.ஏக்களை நாங்கள் இழுப்போம் என குறிப்பிட்டார்.

பாஜக மற்றும் காங்கிரஸ் - ம.ஜ.த இருதரப்புமே ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், ஆளுநரின் முடிவிற்காக இருதரப்பும் காத்திருக்கின்றனர்.

இதனிடையே, அணிமாற்றத்தை தடுக்க கர்நாடகாவின் பிடதி பகுதியில் உள்ள ஈகிள்டன் என்ற தனியார் விடுதிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அக்கட்சி அழைத்துச் செல்கிறது.