வெள்ளி, 18 மே, 2018

இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு! May 18, 2018

Image

கர்நாடக மாநிலத்தில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக வென்றிருந்த பாஜவினை ஆட்சியமைக்க வருமாறு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன. இவ்விரண்டு கட்சிகளுக்கும் 118 சீட்கள் பலம் உள்ளதால் தங்களையே ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று அக்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை மாலை கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு பாஜகவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏக்கள் அணிமாறுவதை தடுக்க காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகள் தங்களின் எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக சொகுசு விடுதிகளில் தங்கவைத்துள்ளன. இது போன்று இந்தியாவில் இதற்கு முன்னதாக எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் நடந்துள்ளன என்பதை இத்தொகுப்பில் காணலாம்.

ஹரியானா:

1982ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தேசியக் கட்சியான காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்ட மாநிலக் கட்சியான இந்திய தேசிய லோக் தள் என்ற கட்சி 31 இடங்களில் வென்றிருந்தது.

மொத்தம் 90 இடங்களுக்காக நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் 36 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக வென்றிருந்தது. 

இருப்பினும் தேர்தலுக்கு முன்னதாகவே பாஜக உள்ளிட்ட வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திய தேசிய லோக் தள் கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது.

தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று பாஜக கூட்டணி ஆளுநர் ஜி.டி.டாப்ஸியிடம் கோரினர்.

இதனையடுத்து எம்.எல்.ஏக்கள் அணிமாறுவதை தடுக்க சுயேட்சைகள் உள்ளிட்ட 48 எம்.எல்.ஏக்களை டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கவைத்தனர். இருப்பினும் ஆளுநர் காங்கிரஸ் கட்சியினை ஆட்சியமைக்க அழைத்தார்.

ஒரு வருடம் கழித்து மீண்டும் நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. அத்தேர்தலில் காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தகக்து.

இதுவே ரிசார்ட் பாலிடிக்ஸ் என்று வர்ணிக்கப்படும் சொல்லுக்கு அடிப்படையாக முதல்முறையாக நடைபெற்ற சம்பவமாகும்.

கர்நாடகா:

தொங்கு சட்டமன்றம் அமையும் போது எம்.எல்.ஏக்களை பாதுகாக்க ஹோட்டல்களுக்கு அழைத்துச்செல்லும் சம்பவங்களுக்கு தலைமையிடமாக இருப்பது கர்நாடகா என்றால் மிகையாகாது.

1983ஆம் ஆண்டில் ராமகிருஷ்ண ஹெக்டே தொடங்கி இது அம்மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்திரா காந்தியால் தன் அரசு கலைந்துவிடுமோ என்று அஞ்சி அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை விடுதிகளில் தங்கவைத்து பாதுகாத்தார்.

பின்னர் மீண்டும் 2009-11 காலகட்டத்திலும், 2004, 2006, 2008 மற்றும் 2012 என இது தொடர்ந்தது. இதே போல தற்போதைய எடியூரப்பா வரை இது தொடர்கிறது.

ஆந்திரப் பிரதேசம்:

1984ல் என்.டி.ராமராவ் இதய ஆப்பரேஷனுக்காக அமெரிக்காவிற்கு செல்ல வேண்டியிருந்ததால், அம்மாநில் ஆளுநர் தாகூர் ராம்லால், பாஸ்கர் ராவை முதலமைச்சராக நியமித்தார். இதன் காரணமாக ஆந்திர மாநில சட்டசபை முடங்கியது, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருந்ததால் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை பெங்களூரு, டெல்லி ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று தங்கவைத்தார்.

பின்னர் சிகிச்சை முடிந்து திரும்பிய என்.டி.ஆர் ரத யாத்திரை மேற்கொண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார்.

குஜராத்:

1995ஆம் பாஜக ஆட்சிக்கு எதிராக அக்கட்சியின் வகேலா காங்கிரஸ் ஆதரவுடன் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற முயன்றார்.

அப்போது அவரின் ஆதரவில் இருந்த 47 எம்.எல்.ஏக்களை மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொகுசு விடுதியில் 7 நாட்களுக்கு தங்கவைத்தார்.

உத்தரப்பிரதேசம்:

1998ல் கல்யான் சிங் தலைமையிலான பாஜக ஆட்சியை, பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருந்த நிலையில் திடிரென அம்மாநில ஆளுநரான ரோமேஷ் பண்டாரி கலைத்த்விட்டு, காங்கிரஸ் கட்சியின் ஜகடாம்பிகா பாலை முதல்வராக நியமித்தார்.

பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், தனது ஆதரவு பாஜக எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர்.

பின்னர், பெரும்பான்மையை நிரூபித்து காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார் கல்யான் சிங்.

பீகார்:

2000ல் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், JD(U) கட்சியின் நிதிஷ் குமார் ஆதரவு எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து விடுவார் என்ற அச்சத்தில் பாட்னாவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கவைத்தனர்.

மகராஷ்டிரா:

2002ஆம் ஆண்டில் சிவசேனா - பாஜக எதிர்கட்சிக் கூட்டணி தங்களிடமிருந்து எம்.எல்.ஏக்களை இழுப்பதை தடுக்க, அப்போதைய முதல்வர் விலாஸ்ராவ் தேஸ்முக், பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கள் ஆதரவில் இருந்த அனைத்து எம்.எல்.ஏக்களையும் தங்கவைத்தார்.

உத்தரகாண்ட்:

2016ல், காங்கிரஸ் கட்சியின் ஹரிஷ் ராவத் பாஜகவில் இருந்த எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்ததால், பாஜக எம்.எல்.ஏக்களை ஜெய்ப்பூர் அழைத்துச் சென்று தங்கவைத்தது.

அங்கு ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்த நினைத்தது, இருப்பினும் மத்திய அரசின் முடிவை உயர்நீதிமன்றம் தடுத்தது.

பின்னர் 2017ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது.

தமிழ்நாடு:

ஜெயலலிதா மறைவையடுத்து, முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவிற்கு வழிவிடும் வகையில் ராஜினாமா செய்தார்.

பின்னர் சசிகலா வற்புறுத்தியதாலே தான் ராஜினாமா செய்ததாக தெரிவித்து, அவருக்கு எதிராக ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து, அவருக்கு சில எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர்.

ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஓ.பி.எஸ் கோரிய நிலையில், இடைப்பட்ட காலத்தில் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்தார் சசிகலா.

அதிமுகவின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பிற்கு வந்தார்.