வியாழன், 17 மே, 2018

புதிய கட்சி தொடங்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன்! May 17, 2018

Image

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் 6 மாதம் சிறை சென்று விடுதலையான முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் புதிய கட்சி தொடங்கியதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சி.எஸ்.கர்ணன், இவர் சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

பணியின் போது, பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான கர்ணன், நீதிபதிகள் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நாடு முழுவதும் அறியப்பட்டவராக மாறினார்.

கடந்த ஆண்டு, நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. பணியில் இருந்து ஓய்வு பெற சில நாட்களே இருந்த நிலையில், கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க தலைமறைவானார். பின்னர் பணி ஓய்வு நாளுக்கு அடுத்த சில நாட்களில் கோவையிலிருந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 6 மாத காலம் சிறை தண்டனையை அனுபவித்து வெளிவந்தார்.

இந்நிலையில், சிறையில் இருந்து வெளிவந்த 5 மாதங்களுக்கு பின்னர், இன்று‘Anti-Corruption Dynamic Party’ என்ற பெயரில் புதிதாக கட்சி தொடங்கியிருப்பதாக கர்ணன் அறிவித்துள்ளார்.

தன் கட்சி அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்றும், நாடு முழுவதுமுள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை தன் கட்சி போட்டியிடச் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருவதால் தான் இந்த முயற்சியில் இறங்குவதாக தெரிவித்த கர்ணன், இது தன் கட்சியின் கொள்கைகளுள் ஒன்று என்றும் அடுத்த கொள்கை தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலித் தலைவர்களை விடுவிக்க ஆவன செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண் பிரதமர் சுழற்சி முறையில் பதவியில் அமர்த்தப்படுவார் என்றும் அவர்கள் அனைவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்களாக இருப்பர் என்றும் கூறினார்.