வியாழன், 31 மே, 2018

செயற்கை முறையில் பழுக்கும் பழத்தினால் ஏற்படும் அபாயம்! May 31, 2018

Image

லாபத்தை பெருக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கும் நடைமுறை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

நுகர்வோரின் நலத்தில், சிறு அக்கறைக்கூட காட்ட மறுக்கும் மனங்கள் மாசடைந்ததால் தான், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை போக்க உண்ணும் பழங்களும் மாசடைந்துவிடுகின்றன. 

சமீபத்தில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல இடங்களில் டன்கணக்கில், கார்பைடு கல் வைத்து பழுக்கவைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்த காட்கிகளை பார்க்கும் போது, ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்வது பழமா? அல்லது விஷமா? என்ற கேள்வியை எழுப்புகிறது. 

மக்களின் தேவையை தவறான வழியில் பூர்த்தி செய்ய, பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து, சுய லாபம் பார்க்கும் விற்பனையாளர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள்? 

மார்க்கெட்டில் அதிக மவுசு இருக்கும் பழங்களான வாழைப்பழம், மாம்பழம், தர்பூசனி, சப்போட்டா போன்ற பழங்களை கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கிறார்கள். 

இயற்கையாக பழங்கள் எப்படி பழுக்கின்றன என்பதை பார்க்கும் போது, சரியான, வெப்பநிலையிலும் , காற்றின் ஈரப்பதத்திலும் இயற்கையாக பழங்களுக்குள் ஏற்படும் வேதியல் மாற்றங்கள் அவற்றை பழுக்கச்செய்கின்றன.  அப்படி இயற்கையாக பழுக்கும் பழங்கள் மென்மையானதாகவும், நல்ல நிறத்திலும், நறுமணத்துடனும், சுவைமிக்கதாகவும் இருக்கும். 

ஆனால் இவை எதுவுமின்றி, செயற்கையகவே பழங்களை பழுக்க வைக்க, கால்சியம் கார்பைடு கற்களை பழங்களுக்கு பக்கத்தில் வைதால் போதும்.  பழங்களில் இருக்கும் நீர்த்தன்மையுடன், கால்சியம் கார்பைடு கலக்கும் போது,  அது வெப்பத்தையும், அசிட்டலின் என்கிற வாயுவையும் வெளியிடுகிறது. இந்த ரசாயன மாற்றம் இயற்கையாக பழம் பழுக்கும் முறையை செயற்கையாக துரிதப்படுத்துகிறது. 

48 முதல் 72 மணி நேரம் வரை இயற்கையாக பழம் பழுக்க தேவைப்படும் நேரம், செயற்கை முறையில் பழம் பழுக்க வெரும் 12 மணி முதல் 24 மணி நேரமாக குறைகிறது.  ஒருக்கட்டத்தில் வரைமுறையின்றி அதிக அளவில் பயன்படுத்தப்படும் கார்பைடு கற்களால் பழங்கள் சுவையற்றதாக மாறிவிடுகின்றன. 

செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் கண்களை கவரும் வகையில் பலபலவென இருக்கும். ஒரு கூடையில் இருக்கும் அனைத்து பழங்களும் ஒரே சீரான நிறத்தில் இருக்கும். இயற்கையாக பழுக்கும் பழங்கள் அங்கங்கு நிறத்தில் மாற்றங்களோடு, சீரான நிறத்தில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லப்பழங்களையும் சாப்பிடுவதற்கு முன் நன்றாக தண்ணீரில் கழுவிவிட்டு, தோலை உரித்து சாப்பிட வேண்டும். பழங்களை வெட்டி சின்ன சின்ன துண்டுகளாக சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஏனென்றால் கழுவி துண்டாக சாப்பிடும் போது, உள்ளே செல்லும் நச்சு பொருட்களின் அளவு குறையும். 

குறிபிட்ட பழங்களுக்கான சீசன் காலங்கள் அல்லாத நேரங்களில் அதை வாங்குவதை தவிற்க வேண்டும்  மேலும்,  கால்சியம் கார்பைடு புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்களை கொண்டுள்ளதால், புற்றுநோய் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

கால்சியம் கார்பைடில் இருக்கும் ஆர்சனிக் மற்றும் பாஸ்பொரஸ் போன்ற நச்சுப்பொருட்களால், அசிடிட்டி, வயிற்றுப்புன், நெஞ்சு எரிச்சல், வாந்தி, வயிற்றுபோக்கு, கண் எரிச்சல், தோல் ஒவ்வாமை , தொண்டைப்புண் , இருமல், மூச்சுத்தினறல், நுரையீரலில் நீர் கோர்ப்பது போன்ற உடல் உபாதைகளுடன் அதிக அளவில் மக்கள் சிகிச்சைக்கு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

செயற்கையாக பழம் பழுக்கவைக்கப்படும் முறை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது என்பதை,  கவனத்தில் கொண்டும் விற்பனையாளர்கள் இம்மாதிரியான சட்டவிரோதமான செயலில் ஈடுபடாமல், மக்கள் நலத்தோடு சேர்ந்து வரக்கூடிய லாபத்தில் மட்டுமே திருப்தி அடைய வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.