புதன், 23 மே, 2018

மிக இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய இந்தியர் என்ற சாதனையை படைத்த 16 வயது இளம்பெண்! May 22, 2018

Image

எவரெஸ்ட் சிகரத்தை மிக இளம் வயதில் அடைந்தவர் என்ற சாதனையை 16 வயதேயான சிவாங்கி பதக் படைத்துள்ளார்.

நேபாளம் மற்றும் சீனாவின் எல்லைகளுக்கு நடுவே அமைந்துள்ளது எவரெஸ்ட் சிகரம், 8,848 மீட்டர் உயரம் கொண்ட இதுவே உலகின் அதிக உயரம் கொண்ட சிகரம் என்ற பெருமை கொண்டதாகும்.

ஒவ்வொரு ஆண்டும், கோடைக்காலத்தில் இச்சிகரத்தில் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது, பிற காலங்களில் வானிலை மோசமாக இருப்பதால் மலையேற்ற வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

கடந்த வாரம் முதல் இந்த பருவ மலையேற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து, இதற்கான அனுமதி (Permit) பெற்றவர்கள் தற்போது மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் என்ற பகுதியைச் சேர்ந்த சிவாங்கி பதக் என்ற 16 வயது இளம் பெண் ஒருவர் எவரெஸ்டில் வெற்றிகரமாக ஏறியுள்ளார். இதன் மூலம் மிக இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய இந்தியர் என்ற சாதனையை சிவாங்கி படைத்துள்ளார்.

இது தொடர்பாக சிவாங்கி கூறும்போது, தான் இந்த சாதனையை படைக்கக் காரணம் அருணிமா சின்ஹா தான் என்றார்.

யார் இந்த அருணிமா சின்ஹா:

அருணிமா சின்ஹா, 2011ல் மிகவும் அறியப்பட்ட பெயர்களில் ஒருவர். 28 வயதான இப்பெண், தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனையாவார். கடந்த 2011ல் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த போது, கொள்ளைக்காரர்கள் இவரிடமிருந்த கைப்பையை பறிக்க முற்பட்ட போது, அவர்களுடனான மோதலில் இவரை கொள்ளைக்காரர்கள் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டனர். தண்டவாளத்தில் விழுந்த அவரின் கால் மீது எதிரே வந்த மற்றொரு ரயில் ஏறி இறங்கியதில் இவரின் கால் துண்டானது. பின்னர் செயற்கைக் கால் பொருத்தப்பட்ட பின்னர் மனம் தளராத அருணிமா தன் லட்சியங்களுள் ஒன்றான எவரெஸ்டில் ஏறுவதை செய்து நாட்டு மக்களை வியக்க வைத்தார்.

இதன் மூலம், உலகிலேயே செயற்கைக் கால் பொருத்தப்பட்டு எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த முதல் பெண் என்ற சாதனையை இவர் படைத்தார்.

அருணிமாவின் சாதனை குறித்து கடந்த ஆண்டு புத்தகம் ஒன்றில் படித்ததன் மூலம் கிடைத்த உத்வேகத்திலேயே சிவாங்கி இந்த சாதனையை படைத்ததாக கூறியுள்ளார்.

சிறுவயது முதலே மலையேற்றத்தின் மீது தீராத மோகம் கொண்டவரான சிவாங்கி, அதற்கான தொழில்முறை பயிற்சிகளை மேற்கொண்டுவருவதுடன், ஸ்பெயினில் உள்ள Javier Camacho உள்ளிட்ட பல சிகரங்கள் மீது ஏறியுள்ளார். மேலும் உலகில் உள்ள அனைத்து சிகரங்கள் மீது ஏறிவிட வேண்டும் என்பதே தன் வாழ்நாள் லட்சியம் என்று குறிப்பிட்டுள்ளார்.