வரும் 2022ம் ஆண்டு இந்தியாவில் G20 மாநாடு நடத்த மத்திய பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு என்றால் என்ன? எதற்காக இந்த மாநாடு இந்தியாவில் நடத்தப்பட வேண்டும்? இங்கு நடத்தப்பட்டால் இந்தியாவிற்கு என்ன பலன்?
அமெரிக்கா, ஜப்பான், கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய G8 நாடுகளோடு, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி ஆகிய 12 வளரும் நாடுகள் என மொத்தம் 20 நாடுகள் இணைந்து ஜி20 நாடுகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 65 சதவிகித மக்கள் இந்த 20 நாட்டைச் சேர்ந்தவர்களே. அதுமட்டுமின்றி, உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் இந்த 20 நாடுகள்தான் உலகின் மொத்த ஜிடிபியில் 85 சதவீத அளவிற்கு பங்காற்றுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் 20 நாடுகளின் பிரதமர்கள் அல்லது அதிபர்கள் பங்கேற்பார்கள். இம்மாநாட்டை நடத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு பொறுப்பேற்றுக் கொள்ளும். அந்தநாடு அந்த ஆண்டு நடக்கும் G20 சந்திப்புகளை நடத்தும். தலைப்பொறுப்பேற்கும் நாடு G20 ல் அங்கம் வகிக்காத நாடுகளையும் சிறப்பு விருந்தினராக அழைக்கலாம்.
முதல் G20 மாநாடு ஜெர்மனியின் பெர்லின் நகரில் 1999-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது, G20 உறுப்பு நாடுகளும் தங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் நிதி தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்படும். அதோடு உறுப்பு நாடுகளுடனான பொருளாதார, பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும்.
இதோடு மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கு இடையிலான தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளும் நடக்கும். உலகின் சில முக்கியமான முடிவுகள் கூட எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 2009-ம் ஆண்டு G20 மாநாட்டில், ஐந்து லட்சம் கோடி டாலர் பணத்தை உலக பொருளாதாரத்தில் புழக்கத்தில் விடப் போவதாக ஒரு பெரிய முடிவு எடுத்தார்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உலக பொருளாதாரம் 2008ம் ஆண்டு சரிவில் இருந்து மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
வரும் 2022ம் ஆண்டு இந்தியா நடத்தும் இந்த ஜி 20 மாநாடு உலக அளவில் பெரிய நிகழ்வாக இருக்கும் என்று பட்ஜெட் அறிவிப்பின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து வரும் இந்தியாவின் பழமையான வரலாறு, பன்முகத்தன்மை, இந்தியர்களின் விருந்தோம்பல் பண்பு ஆகியவற்றை G20 நாடுகள் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். நாடுகளுக்கு இடையேயான உறவுகள் பலப்படுவது, புதிய வணிக மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகள் ஏற்படும். கடந்தாண்டு சீன அதிபர் ஜீ ஷின்பிங் இந்தியா வந்து சென்றதை உலக நாடுகளே ஆச்சர்யத்தோடு பார்த்தன. 2022ம் ஆண்டில் இந்தியாவில் இந்த ஜி20 மாநாடு நடந்தால் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக பல முன்னேற்றங்கள் இந்தியாவிற்கு ஏற்படும். மேலும் சுற்றுலாத்துறையும் வளர்ச்சி அடையும். இதனாலேயே ஜி20 மாநாடு நடத்த இந்த ஆண்டு பட்ஜெட்டில் சின்ன மீனைப்போல சுமார் 100 கோடி ரூபாயை ஒதுக்கி பெரிய மீனுக்கு வலை விரித்திருக்கிறது இந்தியா...
credit n7s.tv