வியாழன், 27 பிப்ரவரி, 2020

124A படுத்தும் பாடு : வாதாட வக்கீல்களை பெற முடியாமல் போராடும் 4 மாணவர்கள்


நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு எதிராக பார் அசோசியேஷன்ஸ் நிறைவேற்றும் தீர்மானங்கள் முற்றிலும் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது.

நீதிமன்றத்தில் சிலருக்காக வழக்காட மாட்டோம்  என்று வழக்கறிஞர்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவது நியாயமற்றது, சட்டவிரோதமானது என்று கடந்த வாரம் கர்நாடக உயர்நீதிமன்றம் எடுத்துரைத்தது.
இருப்பினும், தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 வயது அமுல்யா லியோனா,காஷ்மீரைச் சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்களும், தங்கள் வழக்குகளில்  சட்டப்பூர்வ உதவிகளைப் பெற சொல்லெண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
பெங்களூரில் நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணியில் அமுல்யா லியோனா “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற வாசகத்தை எழுப்பினார். இதனால் அவர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது.
கடந்த புதன்கிழமை, காவலில் எடுத்து விசாரிக்க  அமுல்யா லியோனாவை காவல் துறையினர் மாஜிஸ்திரேட் வீட்டிற்கு கொண்டு வந்தனர்.  லியோனாவை  நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றால் தாக்கப்படலாம் என்ற அச்சம் காவல் துறையினருக்கு இருந்ததாகவும்  காவல்துறை வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
எந்தவொரு வழக்கறிஞரும் வாதாட முன் வராத காரணத்தால், அமுல்யாவின் ஜாமீன் மனு திங்களன்று எடுத்துக் கொள்ளப்படவில்லை. அமுல்யாவை காவல்துறையினர் எடுத்து விசாரிக்கும் கோரிக்கையும் தடைபட்டது.
திங்களன்று, அவருக்காக வாதாட விரும்பிய ஒரு சில பெண் வக்கீல்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டயாத்திற்கு தள்ளப்பட்டனர். “நீதி மன்றத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டோம்,” என்று ஒரு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அமுல்யாவிற்காக வாதாடுவதை எதிர்த்த ஒரு மூத்த வழக்கறிஞர், “அத்தகைய நபர்கள் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டால், அதிகமான மக்கள் இதுபோன்ற வசனங்களை எழுப்ப தொடங்குவார்கள்” என்றார்.
காஷ்மீரின் பாரமுல்லா பகுதியைச் சேர்ந்த பாசித் ஆஷிக் சோஃபி, அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த தலிப் மஜீத், அமீர் மொஹியுதீன் வாணி ஆகியோரும்  இதேபோன்ற பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
கல்லூரி மாணவர்களான இவர்கள் மூவரும் பிப்ரவரி 15 ஆம் தேதி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற சொற்களுடன் கூடிய பாடலை பாடுவதைக் காணலாம். பின்னர், இவர்கள் மூவரும் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
ஹப்பல்லி  பார் அசோசியேஷன் சார்பில், உறுப்பினர் எவரும்”தேசிய விரோத” செயலின் காரணமாக கைது செய்யப்பட்டவர்களுக்காக  நீதிமன்றத்தில் வாதாட மாட்டார்கள் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. பிப்ரவரி 17 ஆம் தேதியன்று ,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அந்த மூன்று இளைஞர்களையும் ஒரு கும்பல் தாக்கியது.
மனித உரிமை வழக்கறிஞர்கள் 24 பேர் அடங்கிய குழு பார் அசோசியேஷனின் தீர்மானம் சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது.  உயர்நீதிமன்றமும் இந்த தீர்மானம் சட்டவிரோதமானது என்ற உத்தரவை பிறப்பித்தது.
பிப்ரவரி 20 ம் தேதி, தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவா ஓகா மற்றும் நீதிபதி ஹேமந்த் சந்தங்கவுடர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,”நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு எதிராக பார் அசோசியேஷன்ஸ் நிறைவேற்றிய  தீர்மானங்கள் முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது”.
இவ்வகையான தீர்மானம் அனைத்து சட்ட மரபுகளுக்கும் தொழில்முறை நெறிமுறைகளுக்கு எதிரானது” என்று ஏ.எஸ். முகமது ரஃபி Vs தமிழ்நாடு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டியது.
இத்தகைய தீர்மானங்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் விருப்பப்படி ஒரு வழக்கறிஞரால் பாதுகாக்கப்படுவதற்கான அரசியலமைப்பு உரிமையை பறிக்க முனைகின்றன.