தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக பீகார் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பீகார் மாநில சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் குறித்து பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசிய குடிமக்கள் பதிவேட்டை பீகாரில் செயல்படுத்தமாட்டோம் என தெரிவித்தார். மேலும் தனது தாயின் பிறந்த தினம் தனக்கே தெரியாது எனக்கூறிய அவர், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் இருக்கும் சர்ச்சைக்குறிய கேள்விகளை நீக்க வலியுறுத்தி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார்.
மேலும் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை 2010ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட விதிகளின் படியே செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மாநிலத்தில் மட்டும் செயல்படுத்தவே ஆலோசனை செய்யப்பட்டதாகக் கூறிய நிதிஷ் குமார், அது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் விளக்கமளித்ததாகவும் கூறினார். பீகாரில் பாஜக கூட்டணியுடன் ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்கிறது. மேலும் பாஜக கூட்டணியில் இருக்கும் மாநிலத்தில் முதல்முறையாக தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv