சனி, 22 பிப்ரவரி, 2020

தமிழக அரசு சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு என்ன செய்தியை உணர்த்த விரும்புகிறது: கனிமொழி கேள்வி

2020-02-19@ 17:43:26








சென்னை: தமிழக அரசு சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு என்ன செய்தியை உணர்த்த விரும்புகிறது என தி.மு.க எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இருந்தாலும் நாடுமுழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மாநிலம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்கள் மற்றும் பேரணி, மனித சங்கிலி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளால் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இரண்டரை கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி அதை குடியரசு தலைவருக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்தது.

அப்போது, திடீரென போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் ஏராளமானோர்  காயம் அடைந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் கடந்த 6 நாட்களாக இஸ்லாமியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இதனை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திற்கு மகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் திமுக-வின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி; மாநிலம் முழுக்க நடைபெறும் சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை கண்காணிக்க 6 அதிகாரிகளை டிஜிபி நியமித்துள்ளார்.

தூத்துக்குடிக்கு நியமித்துள்ள மகேந்திரனின் மேற்பார்வையில்தான் ஸ்டெர்லைட் போராட்டங்களின் போது 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவரை நியமித்தன் மூலம் தமிழக அரசு சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு என்ன செய்தியை உணர்த்த விரும்புகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்
credit dinakaran.com