குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கொள்கை முடிவு எடுக்கும் வரை சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் தொடரும் என அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டம் 3-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பினருடன், அமைச்சர் ஜெயக்குமார் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். ராயபுரம் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் கலந்து கொண்டார். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் குறிப்பிட்ட 6 கேள்விகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதைத் தொடந்து செய்தியாளர்களைச் சந்தித்த அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பினர், முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ள போதும், முக்கிய கோரிக்கையான குடிமக்கள் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்கும் வரை போராட்டம் நீடிக்கும் என கூறினர்.
credit ns7.tv