வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை கைவிடும் 10 பொறியியல் கல்லூரிகள்!


Image
குறைந்து வரும் மாணவர் சேர்க்கை, தொடர் நஷ்டம், பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் வரும் கல்வியாண்டு முதல் 10 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை கைவிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொதுவாகவே மக்களுக்கு மருத்துவப்படிப்புக்குப் பிறகு, அதிக நாட்டம் இருந்தது இஞ்சினியரிங் படிப்பின் மீதுதான். மருத்துவம் கிடைக்காவிட்டால் என்ன, இஞ்சினியரிங் கிடைத்தால் என்று அதன் மீது ஆர்வம் கொண்டிருந்தனர். மருத்துவமும், இஞ்சினியரிங் படிப்பும் சமமாக கருதப்பட்ட காலம் இருந்தது. இந்நிலையில், இஞ்சினியரிங் படிப்பிற்கு இருந்த தகுதித்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஒற்றைச்சாளர முறையில் சேர்க்கை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் விளைவாக 2000ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் இஞ்சினியரிங் படிப்போரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது. இஞ்சினியரிங் படிப்பிற்கான டிமாண்ட் அதிகரித்ததால் அதிக அளவிலான இஞ்சினியரிங் கல்லூரிகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், இஞ்சினியர்கள் உருவான அளவிற்கு போதிய அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாததால், இஞ்சினியரிங் படித்த லட்சகணக்கான மாணவர்கள் வேலையில்லாமலும், வேலை கிடைத்தவர்கள் மிக குறைவான ஊதியத்திற்கும் வேலை செய்து வருகின்றனர். இதன் காரணமாக, மாணவர்களின் விருப்பம் இஞ்சினியரிங்கில் இருந்து மீண்டும் கலை மற்றும் அறிவியல் படிப்புகள் பக்கமே திரும்பியது. இதன், காரணமாக பல இஞ்சினியரிங் கல்லூறிகளில் தொடர்ச்சியாக சேர்க்கை குறைந்தது. இஞ்சினியரிங் கல்லூரியில் சீட்டு வேண்டும் என்றால், பெரிய ஆட்களின் பரிந்துரை தேவைப்பட்டது போய், மாணவர் சேர்க்கைக்காக கல்லூரிகளே சலுகைகளை அளித்து சீட்டுகளை கூவி கூவி விற்க ஆரம்பித்தது. எனினும், மாணவர் சேர்க்கையில் முன்னேற்றம் ஏற்படாததால் பல கல்லூரிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன.
இந்நிலையில், மாணவர் சேர்க்கை குறைந்ததன் காரணமாக, கடந்த ஆண்டில் 537 ஆக இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை வரும் கல்வியாண்டு முதல் 509 ஆக குறைகிறது. நடப்பு கல்வியாண்டில் 18 கல்லூரிகள் ஏற்கனவே மாணவர் சேர்க்கையை நிறுத்தி உள்ள நிலையில், வரும் கல்வியாண்டில் 10கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையை நிறுத்துகின்றன. 
மாணவர் சேர்க்கை குறைந்தது மட்டும் காரணம் இல்லாமல், குறைந்த ஊதியத்துக்கு தகுதியான பேராசிரியர்கள் கிடைப்பதில் சிரமம், சரியான மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் ஏற்கனவே பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சம்பளம் ஆகியவையும் காரணங்களாக இருக்கின்றன.
நடப்பு ஆண்டில் 1.71 லட்சம் இஞ்சினியரிங் படிப்பிற்கான இடங்கள் உள்ள போதும், 82,819 இடங்களே நிரம்பின. 7.300-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே கல்வி பயில்கின்றனர். 8.3 சதவீத கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன. வரும் கல்வி ஆண்டுகளில் மூடப்படும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
credit ns7.tv