வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

பாத் பீகார் கி' சுற்றுப்பயணம்: பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப்பதிவு


‘பாத் பீகார் கி’ என்ற அரசியல் சுற்றுபயணத்தை கடந்த பிப்ரவரி 20ம் தேதி பிரசாந்த் கிஷோர் பீகாரில் தொடங்கினார். இந்த சுற்றுபயணத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவின் வளர்ச்சி அடைந்த முதல் பத்து மாநிலங்கள் பட்டியலில் பீகாரை கொண்டு வரவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வது.
அதற்காக, அடுத்த நூறு நாட்களுக்குள் குறைந்தது 10 மில்லியன் பீகார் இளைஞர்களை சந்திக்கும் வகையில் இந்த அரசியல் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், சாஸ்வத் கவுதம் என்பவர் பாடலிபுத்ர  காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பிரசாந்த் கிஷோரின் ‘பாத் பீகார் கி’ திட்டம் தன்னுடைய கற்பனையில் உருவானது என்றும், இந்த திட்டத்தை தான் விரைவில் செயல்படுத்த இருந்ததாகவும்  தெரிவித்துள்ளார்.
மேலும், தனது புகார் மனுவில், தானும், ஒசாமா என்பவரும் சேர்ந்து உருவாக்கிய இந்த பாத் பீகார் கி திட்டத்தை ,  பிரசாந்த் கிஷோரிடம் விவரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சாஸ்வத் கவுதம் புகாரை அடுத்து, பாடலிபுத்ர காவல்  துறை, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 420 (ஒருவரை ஏமாற்றி அதன்மூலம் நேர்மையின்றி அவரைத் தூண்டி, ஒரு சொத்தைப் பிறருக்கு கொடுக்கும்படி செய்தல்) 406 (நம்பிக்கையை மீறியதற்காக தண்டனை) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு  செய்துள்ளது.
இதுகுறித்து, பிரசாந்த் கிஷோர் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக தான் பயணித்த ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணி கட்சியான பாஜக மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்தார் பிரசாந்த் கிஷோர். இந்த ஆண்டு ஜனவரி இறுதியில்,அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், பிப்ரவரி 18ம் தேதி செய்த்கியாளர்கள் சந்திப்பில் ‘பாத் பீகார் கி’ என்ற சுற்றுப்பயணம் குறித்து அறிவித்தார். பீகார் சட்டசபைக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
credit indinaexpress.com