வாக்குச்சாவடிக்கு செல்லாமலே, வாக்கு செலுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க சென்னை ஐஐடி-யுடன் கைகோர்க்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.
வாக்கு செலுத்தும் முறையை மேலும் மெருகேற்றும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது தேர்தல் ஆணையம்.
தொகுதியில் இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லாமல், இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிக்கும் வகையிலான தொழில்நுட்பம் தற்போது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வடிவில் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா கூறுகையில், ‘இரு வழி எலக்ட்ரானிக் வாக்களிக்கும் முறை’ உருவாக்கப்பட இருப்பதாகவும் இது தனி இணைய வழித்தடத்தில், பயோமெட்ரிக் சாதனங்கள், வெப் கேமரா உதவியுடன் இயங்கும் வகையில் இருக்கும் எனவும் கூறினார்.
இருக்கும் இடத்தில் என்று கூறினாலும், விட்டிலிருந்தே வாக்கை செலுத்த முடியாது என்றும், இருக்கும் நகரத்திலேயே ஒரு குறிப்பிட்ட மையத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், குறிப்பிட்ட மையத்தில் வாக்காளரின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பின்னர், எலக்ட்ரானிக் வாக்கு சீட்டு உருவாக்கப்பட்டு அதில் செலுத்தப்படும், பின்னர் இது தொடர்பான தகவல் குறிப்பிட்ட வேட்பாளருக்கும், அரசியல் கட்சிக்கும் தெரியப்படுத்தும் வகையில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மையத்தில் செலுத்தப்படும் வாக்குகள் மறையாக்கம் (encryption), மறைவிலக்கம் (Decryption) செயல்முறைகளில் அனுப்பப்படும் என்பதால் தகவல் திருட்டுக்கு வாய்ப்பு ஏற்படாது என்றும் தெரிவித்தார். அதே போல இந்த வாக்குகள் அனைத்தையும் வாக்கு எண்ணும் மையத்தில் சரிபார்த்துக்கொள்ள இயலும்.
உதாரணத்திற்கு இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டிற்கு வருகையில், நாடாளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தலுக்கு சென்னையில் வாக்களிக்க வேண்டிய நபர் டெல்லியில் இருந்தாலும் அங்கிருக்கும் ஒருங்கிணைந்த வாக்கு செலுத்தும் மையத்திற்கு சென்று தனது வாக்கை பதிவு செய்ய இயலும். இதன் மூலம் வாக்குப்பதிவு அதிகரிப்பதுடன், வாக்காளருக்கு பயணச் செலவையும் மிச்சப்படுத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தற்போது ஆராய்ச்சி வடிவில் இருக்கும் இந்த தொழில்நுட்பம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெளிவுபடுத்தவில்லை. இதற்கான ஒப்புதல் கிடைத்த பின்னர் இந்த தொழில்நுட்பம் பரிசோதித்து பார்க்கப்படும் என கூறப்படுகிறது.
credit ns7.tv