புதன், 26 பிப்ரவரி, 2020

டெல்லி வன்முறையில் உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு! February 26, 2020

டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத், மஜ்பூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், சட்டத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிப்போர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கல்வீசித் தாக்கிக் கொண்டதால், போராட்டம் வன்முறையாக உருமாறி கட்டுக்கடங்காமல் சென்றது. வன்முறையின் போது ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்துப்பட்டன. வன்முறையின் போது, இளைஞர் ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டி, சுடுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
photo
மூன்றாவது நாளாக நீடிக்கும் வன்முறையில், இதுவரை தலைமை காவலர் ஒருவர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக, டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் சிலர் துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த 190க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை முதலமைச்சர் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 
photo
வன்முறை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.  வடகிழக்கு டெல்லியின் 4 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பதற்றம் நீடிக்கும் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்துக்கு தடைவிதித்துள்ள காவல்துறை. 
இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள தேர்வு மையங்களில், வரும் 26-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகளை ஒத்திவைப்பதாக சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், உள்ள கல்வி நிலையங்களுக்கு காலவரையற்ற விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. 
photo
இதனிடையே, டெல்லி மக்கள் அமைதி காக்குமாறு, அம்மாநில காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தேவையற்ற வதந்திகளையும், சமூக வலைதளங்களில் பரவும் உண்மையற்ற குறுஞ்செய்திகளையும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
credit ns7.tv