தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கத்தின் இருப்பு குறைவு எனினும், தங்கம் பயன்பாடு இந்தியாவில் அதிக அளவிலேயே இருக்கும். பெரும்பாலான நடுத்தர மக்களின் சேமிப்பு என்பது தங்கமாகவே இருக்கும்.ஆனால் அண்மையில் ஏற்பட்டுள்ள தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களை அவதிக்கு உள்ளாக்கி உள்ளது. சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்கள் தங்கம் விலையை எப்போதும் பாதித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போதும் தங்கம் விலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.

சென்னையை பொறுத்த வரை ஆபரண தங்கம் கிராமுக்கு 94 ரூபாய் உயர்ந்து 4166 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சவரனுக்கு 752 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அளவில் தங்கம் விலை 33 ஆயிரம் ரூபாயை தொட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயர்ந்தது. அப்போது, வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் தங்கம் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியது. போர் பதற்றம் தணிந்த பிறகு, தங்கம் விலை குறைந்தது.

அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தாலும், பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த 18ம் தேதியிலிருந்து நாள் தோறும் புதிய உச்சத்தை தொட்டு கொண்டே வருகிறது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு சுமார் 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.. இந்த விலை உயர்வுக்கு சர்வதேச அளவில் உள்ள சில காரணிகளை காரணமாக அடுக்குகின்றனர் தங்கம் விற்பனையாளர்கள்.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்காக நகை வாங்க வேண்டும் என எண்ணியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், எப்போது தங்கம் விலை குறையும் என்ற ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர் நடுத்த மக்கள்.
credit ns7.tv