2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு புறப்பட்டார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 2 நாள் சுற்றுப்பயணமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் இந்தியா வருகின்றனர். அதிபராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக, அவர் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது மனைவியுடன் வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.
அகமதாபாத் விமான நிலையத்திற்கு வரும் ட்ரம்பை பிரதமர் மோடி, வரவேற்க உள்ளார். பின்னர் அங்கிருந்து சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு அவர்கள் செல்ல உள்ளனர். அவர் செல்லும் பாதையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கும் ட்ரம்ப், அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்கூட்டியே குஜராத் சென்றுள்ளார்.
இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
credit ns7.tv