வியாழன், 20 பிப்ரவரி, 2020

கீழடி பொருட்களை ஆய்வு செய்ய மேலும் 3 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் விருப்பம்..!

கீழடி பொருட்களை ஆராய்ச்சி செய்வதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் ஏற்கனவே ஹார்ட்வேர் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் தற்போது மேலும் மூன்று சர்வதேச பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆராய்ச்சி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், கீழடி பொருட்கள் குறித்த ஆய்வுகள் மார்ச் மாதத்திலிருந்து தொடங்கும் எனவும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். 
K1
தமிழக அரசு கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் வரலாறு குறித்து ஆய்வு செய்வதில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. மேலும் நாளை (19-02-2020) கீழடியில் 6வது அகழாய்வு பணியையும் தமிழக முதல்வர் தலைமையில் தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிலையில் தமிழக அரசுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் இணைந்து கீழடி அகழ்வாராய்ச்சியை தீவிரமாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக அன்சியண்ட் டிஎன்ஏ (Ancient DNA) ஆராய்ச்சி குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட உள்ள நிலையில், சிகாகோ பல்கலைக்கழகம், பூனே டெகான் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக தயார் நிலையில் இருப்பதாக மதுரை காமராஜர் பலகலைக்கழகத்தின் துணை வேந்தர் கிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். 
harvard
கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். மேலும் மானஸா என்ற ஆராய்ச்சியாளர் கீழடியில் கிடைக்கப்பெற்ற அன்சியண்ட் DNA தொல்லியல் பொருளை பூனேவில் உள்ள டெக்கான் ஆராய்ச்சி கூடத்தில் ஆராய்ச்சி செய்து வருவதாகவும், அதனுடைய முடிவுகள் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். 
k
மேலும் ரூசா அமைப்பின் சார்பில் ரூ. 34 கோடி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் ரூ. 2 அல்லது 3 கோடி கீழடி அகழ்வாராய்ச்சிக்காக ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். இந்த வருடம் மார்ச் மாதம் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் தொடங்கும் எனவும், அதற்காக 20,000 சதுர அடி கொண்ட பிரத்தியேக கட்டிடம் ஆராய்ச்சிக் கூடமாக செயல்பட தயாராக உள்ளதாகவும் துணை வேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
credit ns7.tv