credit ns7.tv
உலகின் மிக உயர்ந்த மலை சிகரங்களில் ஏறி சென்னையை சேர்ந்த இளம் வீராங்கனை சக்தி நிவேதா அசத்தி வருகிறார் .
திகில், சவால், தன்னம்பிக்கை, விடா முயற்சி என வித்தியாசமான அனுபவங்களை தருகிறது மலையேற்றம். இதனை சிலர் பொழுதுப்போக்குக்காக பயன்படுத்த, வெகு சிலர் மட்டுமே லட்சியமாக கொண்டு பேராவலுடன் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் ஒரு இளம்பெண்ணாக பல சாவல்களையும் கடந்து, மலையேற்றத்தில் கலக்கி வருகிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இளம் பொறியாளரான சக்தி நிவேதா. மிக உயர்ந்த மலை சிகரங்களான எல்பிரஸ் மற்றும் அகோன் காகுவா மலைகளில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார் நிவேதா.

புனேவில் மென் பொறியாளராக பணியாற்றும் அவர், தற்போது இமயமலையில் உள்ள கரடுமுரடான மலை சிகரங்களில் ஏறி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மலை ஏற்றத்துடன் நிற்காமல், தண்ணீரின் முக்கியதுவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

ஒவ்வொரு மலை ஏற்றமும் புதிய அனுபவங்களை கற்றுத் தருவதோடு, மென்மேலும் மலை ஏற்றத்தில் ஈடுபட தூண்டுவதாக தனது அனுபவம் குறித்து நிவேதா கூறுகிறார். மேலும் சாதனையை விட, மலை ஏற்றத்தை நிவேதா பாதுகாப்புடன் நிறைவு செய்தார் என்ற செய்திதான், முழு மனமகிழ்ச்சியைக் ஏற்படுவதாக கூறி, நெகிழ்கிறார் அவரது தாயார்.

ஏழு கண்டங்களில் உள்ள மிக உயர்ந்த மலை சிகரங்களில் ஏற வேண்டும் என்பதே லட்சியம் என சூளுரைக்கும் நிவேதா, அதில் இரண்டை முடித்துவிட்டதாகவும், எவரெஸ்டில் ஏற தயாராகிவிட்டதாகவும் கூறுகிறார். ஆனால் அதற்கான பொருளாதார வசதி இல்லை என வருந்தும் அவர், மற்ற மாநிலங்களைப் போல், தமிழக அரசு நிதி உதவி அளித்து உதவவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பல சவால்களை எதிர்கொண்டு இளம் வயதில் சாதிக்கும் நிவேதா போன்ற வீராங்கனைகளை, அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.