குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது. அதற்காக நாளை தலைமைச் செயலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தன. இந்தப் போராட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி வாராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், சென்னையில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்த 13 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு ஏற்கெனவே அனுமதி மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து நாளை இஸ்லாமிய அமைப்புகள் நடத்த இருந்த தலைமை செயலக முற்றுகை போராட்டத்திற்கு அனுமதியில்லை எனக் கூறி நீதிபதிகள் தடை விதித்தனர். மேலும் வழக்கு தொடர்பாக தமிழக உள்துறை, காவல்துறை டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் வருகிற மார்ச் 11ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டனர்.
credit ns7.tv