சனி, 15 பிப்ரவரி, 2020

டிரம்பின் வருகைக்காக உருமாறும் குஜராத்....!

Image
வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியா வந்தால், சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் குஜராத்தில் குடிசைகளை மறைக்க சுற்றுச்சுவர் எழுப்பப்படுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றப் பிறகு முதல்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் டொனால்ட் டிரம்ப். வரும் பிப்ரவரி 24, 25ம் தேதிகளில் இந்தியா வரும் டிரம்ப், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கும் செல்கிறார். டிரம்பின் வருகையையொட்டி அம்மாநிலத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 
இந்திரா பாலம் - சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் சாலையை தான் அதிபர் டிரம்ப் பயன்படுத்துகிறார். இந்த சாலையின் பக்கவாட்டில் உள்ள சேரியில் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 பேர் வசித்து வருகின்றனர்.
அவர்கள் வாழும் குடிசைப் பகுதிகள் அதிபர் டிரம்பின் கண்ணில் படாமல் இருக்க குடிசைப் பகுதியை மறைக்கும் வகையில், சாலையோரமாக மிகப்பெரிய சுற்றுச்சுவர் கட்டும் பணியில் அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 
இதற்காக 600 மீட்டருக்கு சுமார் 7 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இது ஒன்றும் இந்தியாவுக்கு புதிதல்ல. கடந்த 2017ம் ஆண்டு ஜப்பான் பிரதமர் சின்சோ அபே குஜராத்திற்கு வந்தபோதும் இதே குடிசைப் பகுதிகள் மிகப்பெரிய துணியால் சுற்றுச்சுவர் போல் மூடப்பட்டது. ஆனால் மாநில அரசின் இந்த நடவடிக்கை குடிசை வாழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியிருக்கும் இந்தியா, மறுபக்கம் குடிசைப் பகுதிகளை மறைக்க சுற்றுச்சுவர் எழுப்புவது முரணாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் குரல் எழுப்பி வருகின்றனர்
குடிசை வாழ் மக்களும் இந்நாட்டு மன்னர்களே என்றும் அவர்களை புறக்கணிக்கும் விதமாகவும் வெளிநாட்டுத் தலைவர் முகம் சுழித்து விடக்கூடாது என்பதற்காக சொந்த நாட்டு மக்களை சிறுமைப்படுத்தி தீண்டாமை சுவர் எழுப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
மெக்சிகோ நாட்டு மக்கள் அமெரிக்காவில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக எல்லையில் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சுற்றுச்சுவர் எழுப்பியது சர்வதேச அரங்கில் விமர்சிக்கப்பட்டது. தற்போது அதே அதிபருக்காக குஜராத் அரசு குடிசைப் பகுதிகளை மறைக்க சுற்றுச்சுவர் கட்டி எழுப்புவது நாடு முழுவதும் எதிர்ப்பலைகளுக்கு வித்திட்டுள்ளது.
credit ns7.tv