குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தடையை மீறி சென்னையில் பேரணி நடத்திய 20 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவித்தது. இந்தப் போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்த இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்தன.
அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் சட்டப்பேரவையை நோக்கி இஸ்லாமியர்கள் பேரணி நடத்தினர். சென்னை கலைவாணர் அரங்கம் அருகே தொடங்கிய பேரணியில், சுமார் 30 ஆயிரம் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். கையில் தேசிய கொடிகளை ஏந்தி பேரணியில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக 20 ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
credit ns7.tv