வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

மாணவர்கள் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் - தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!

Authors
Image
மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் அபாயகரமான சூழலைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தமிழக அரசு எடுக்க வேண்டும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 3 வருடங்களில், 9 மற்றும் 10 வகுப்பு கல்வியை, பாதியில் நிறுத்திய மாணவர்களின் எண்ணிக்கை நூறு சதவீதம் அதிகரித்துவிட்டது என்று, நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 2017-18-ல் மட்டும், 16 சதவீதம் பேர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியிருக்கிறார்கள் என்றும், குறிப்பாக 2015-16-ல் 8 சதவீதமாக இருந்த இடைநிற்றல், அடுத்த ஆண்டு 16 சதவீதமாக அதிகரித்திருக்கிறது என்றும், மத்திய மனிதவளத்துறை அமைச்சர் வெளியிட்டிருக்கும், புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 
மாணவர்களின் இடைநிற்றல் சதவீத உயர்வை அப்படியே மறைத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அறிவித்திருந்தார், என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் விட்டுச் செல்வதற்கு, அவர்களின் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள வேலைஇழப்பு காரணமா?, என்பது போன்றவற்றை ஆய்வு செய்ய, மூத்த கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என்று, அமைச்சர் செங்கோட்டையனை கேட்டுக் கொள்வதாகவும், ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்காலத்தில் ஒரு மாணவர் கூட, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் சூழல் வராமல், தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தமிழக அரசை எடுத்திட வேண்டும், என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
credit ns7.tv