பொருளாதார சரிவிலிருந்து மீள மக்களிடம் உடனடியாக பணப்புழக்கத்தை அதிகரிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் விடுதியில் தென்னிந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை சார்பில் மத்திய பட்ஜெட் குறித்த பகுப்பாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்று தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ளதாகவும், எல்லா துறைகளும் சரிவை சந்தித்து வருவதாகவும் அப்போது அவர் கூறினார். மக்களிடையே பொருட்களை வாங்கும் சக்தி இல்லை என்று கூறிய ப.சிதம்பரம், பொருளாதார வளர்ச்சி மிகக்குறைவாக உள்ளதாகக் கூறினார். அரசின் செலவினம்,தனியார் முதலீடு,தனியார் நுகர்வு,ஏற்றுமதி ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என அவர் தெரிவித்தார்.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம்,விவசாயிகளுக்கு நிதி வழங்கும் பிரதமர் கிஷான் திட்டம் போன்ற மக்களிடம் உடனயாக பணம் கிடைக்கும் வகையிலான திட்டங்களுக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.
credit ns7.tv