வெள்ளி, 2 அக்டோபர், 2020

ஹத்ராஸ் சென்ற ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தம்; போலீஸ் கீழே தள்ளியதாக ராகுல் புகார்

 உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் தாக்குதலால் பலியான தலித் பெண் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஹத்ராஸ் சென்றபோது யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், போலீசார், அவருடன் சென்றவர்கள் மீது தடியடி நடத்தியதாகவும் ராகுல் காந்தியைக் கீழே தள்ளியதாகவும் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில், 2 வாரங்களுக்கு முன்பு ஆதிக்க சாதி ஆண்கள் 4 பேர் 19 வயது தலித் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து மிருகத்தனமாக தாக்கினர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் புதன்கிழமை நள்ளிரவில் அவருடைய கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டு குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி போலீசாரால் வலுக்கட்டாயமாக இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை தாக்குதல் காரணமாக தலித் பெண் பலியான சம்பவம் நாட்டையே அதிரச் செய்துள்ளது. இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியுடன் ஹத்ராஸுக்கு அணிவகுத்துச் சென்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் தடியடி நடத்தியதாகவும் அவரை கீழே தள்ளியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி, தான் 144 தடை உத்தரவை மீற விரும்பவில்லை என்றும் தான் மட்டும் தனியாக ஹத்ராஸ் செல்ல விரும்புகிறேன் ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு, போலீசார் அவரிடம், இந்திய தண்டனைச் சட்டம் 188 பிரிவு உத்தரவை மீறியதற்காக அவர்கைது செய்வதாக கூறுகின்றனர்.

ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஹத்ராஸ் நோக்கி காரில் சென்றபோது, அவர்களுடைய கார்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்திய பின்னர், இருவரும் ஹத்ராஸுக்கு நடைபயணமாக செல்லத் தொடங்கினர். பின்னர், ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் தாங்கள் போலீசாரால் தடுத்து நிறுத்த முயன்றதற்காக உத்தரபிரதேச அரசாங்கத்தை விமர்சித்து ட்வீட் செய்தனர்.


ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “துயரமான காலங்களில் அன்புக்குரியவர்கள் தனிமையில் விடப்படுவதில்லை. துக்கத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தை சந்திப்பது அரசாங்கத்தை பயமுறுத்தும் என்பது உ.பி.யில் நடக்கும் காட்டாட்சியின் எண்ணமாக உள்ளது. ரொம்ப பயப்பட வேண்டாம், முதலமைச்சரே” என்று ட்வீட் செய்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி, தொண்டர்களுடன் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தபோது அவர் தரையில் தள்ளப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் வருவதற்கு முன்னதாகவே, ஹத்ராஸ் மாவட்டத்தில் 144 பிரிவு தடை விதிக்கப்பட்டு, எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ஹத்ராஸில் கூட்டுப் பாலியல் தாகுதலால் பலியான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சில சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் சென்றபோது, உத்தரப் பிரதேச காவல்துறை NH-93 தேசிய நெடுஞ்சாலையில், அவர்கள் மீது தடியடி நடத்தியயுள்ளது.

மேலும், ஹத்ராஸ் கூட்டு பாலியல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) உத்தரபிரதேச அரசு மற்றும் மாநில காவல்துறைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. “ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணை ஒரு கும்பல் மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக கண்டனம் தெரிவித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


ஹத்ராஸ் செல்ல முயன்றபோது, யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்ட, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜிவாலா ஆகியோரை உத்தரப் பிரதேச போலீசார், புத் இண்டர்நேஷ்னல் சர்குட் விருந்தினர் இல்லத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.