புதன், 7 அக்டோபர், 2020

பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும்

  கொரோனா பொது முடக்கநிலை அறிவிக்கப்படுவதற்கு முன்பே, நாடு முழுவதும் பள்ளிகள் செயல்பட தடைவிதிக்கப்பட்டன. திங்களன்று (அக்டோபர் 5) பள்ளிகள் மறுதுவக்கம் குறித்த நிலையான செயல்பாட்டு வழிமுறைகள்/வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது.

பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும்?

அக்டோபர் 15-க்கு பிறகு படிப்படியாக பள்ளிகள் மற்றும் பயிற்சி நிலையங்களை மீண்டும் திறப்பது பற்றிய முடிவை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தீர்மானிக்கலாம்.   அதாவது, அந்தந்த மாநில அரசுகள் எடுக்கும் முடிவைப் பொருத்து மாணவர்கள் பள்ளிகள் மீண்டும் திரும்புவது உறுதி செய்யப்படும்.

உதாரணமாக, மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் வெளியான பின்பும், இந்த மாத இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. மறுபுறம், உத்தரபிரதேச அரசு பல கட்டங்களாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவித்தது. உள்ளூர் நிலைமையின் அடிப்படையில், பள்ளிகள் மீண்டும் திறப்பது பற்றிய  முடிவுகளை அதிகாரிகள் எடுக்கலாம் என்றும் தெரிவித்தது.

கோவிட்-19 பாதிப்பிலிருந்து மாணவர்களை பாதுகாக்க முடியும் என்று உறுதி செய்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்?   

இதுவும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின்  விருப்பப்படி விடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், ” கடந்த மாதம் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிமுறைகளில் கூட 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு, தங்கள் விருப்பத்தின் பேரில் நேரில் பள்ளிக்கூடங்களுக்கு வர அனுமதிக்கலாம் என  தெரிவித்திருந்தது.  எனவே, முதலில் உயர்க்கல்வி மாணவர்கள் வழக்கமான பள்ளி நடைமுறைகளுக்கு மாற்ற  மத்திய அரசு விரும்புகிறது” என்று தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இளைய மாணவர்களை முதலில் பள்ளி நடைமுறைகளுக்கு மாற்ற ஒரு மாநில அரசு முடிவு செய்தால், கல்வி அமைச்சகம் தலையிடாது என்று ஒரு மூத்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம்  தெரிவித்தார்.

வருகைப் பதிவேடு குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

வருகைப் பதிவு கட்டாயமாக்கப் படக்கூடாது. பெற்றோர்களின் எழுத்துபூர்வ ஒப்புதலுடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிகள் / கல்வி நிலைய வகுப்புகளில் பங்கேற்கலாம் என்று வழிமுறைகள் தெரிவிக்கின்றன.

மேலும், நேரடியாக வகுப்புகளுக்கு வருவதைவிட ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதையே சில மாணவர்கள் விரும்பினால், அதற்கு பள்ளிகள் அனுமதி அளிக்க வேண்டும்   என்றும் தெரிவிக்கின்றன.

தகவல் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய பாடம் கற்பிப்பதற்கான நடைமுறைகள் இல்லாத பள்ளிகள்,   மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு வகுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் எவ்வாறு  செயல்படும்?  

வகுப்புகளில் பங்கேற்க  பெற்றோர்கள் ஒப்புதலை வழங்கினாலும், மாணவர்கள் தினமும் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள். சுழற்சிமுறையில் வகுப்பறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

வீட்டில் இருக்கும் நாட்களில், “கருத்தியல் ரீதியாக எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சுயகற்றல் பாடப்பகுதிகளை படிக்க மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள்

அதிக எண்ணிகையிலான மாணவர்கள் வருகை இருந்தால் , இரண்டு ஷிப்ட்களில்  வகுப்புகளை எடுப்பது குறித்து ஆராயலாம்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம்  அணிய வேண்டும். பள்ளியின் அனைத்து இடங்களும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். அவசர காலக் குழு, பொது உதவிக் குழு, சுகாதார ஆய்வுக் குழு போன்ற குழுக்களை பள்ளிகள் அமைக்க வேண்டும். தனிநபர் இடைவெளி, சமூக இடைவெளி ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும். அறிவுறுத்தல்கள் தாங்கிய அறிவுப்புகளை போதுமான அளவில் வைக்க வேண்டும்.

பாடப் புத்தகங்கள், உணவுகள், விளையாட்டுப் பொருட்களை மாணவர்கள் பகிர்ந்து கொள்ள  தடைசெய்யப்படும். வானிலை ஒத்துழைத்தால்,  வெளிப்புற சூழலில் வகுப்புகளை நடத்தலாம்.

முடிந்தவரை, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான  மாணவர்கள், பள்ளிக்கு தினமும் ஸ்கூல் பேக் கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கலாம். மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வகுப்பறையில் வைத்து செல்லும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

முடிந்தவரை, பொது போக்குவரத்து வசதிகளைத் தவிர்த்து குழந்தைகளை தங்கள் சொந்த வாகனங்களில் கொண்டு செல்ல பெற்றோர்கள் முன்வர வேண்டும். இதை, கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் . வயதான ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ளவர்கள் பள்ளிக்குள் நுழைய  அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மதிப்பீடுகள்  எப்படி இருக்கும்?

கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி, ” பள்ளிகள்  மீண்டும் திறந்த முதல் 2- 3 வாரங்களுக்கு, மாணவர்களின் செயல்பாடு மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. மதிப்பீடு செய்யப்பட்டாலும், ” மாணவர்களின் மன நலன், உடல் நலன் பாதிக்கப்படாத வகையில் அமைய வேண்டும்” என்று தெரிவிக்கப்படுகிறது.

செயல்முறைக் கல்விக்கு அதிக முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் அதற்கான தொழில்நுட்பத்தை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், பின்தங்கிய,இடம்பெயர்ந்த மாணவர்கள் வீடிழந்த மாணவர்கள் மாற்றுத் திறனாளி மாணவர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.