சனி, 9 ஜனவரி, 2021

டெல்லி போராட்டக் களத்தில் 3 பேர் தற்கொலை எதிரொலி: விவசாயிகளுக்கு உளவியல் பயிற்சி

 டெல்லியில் வேளாண் மசோதாவை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். எனவே போராட்ட களத்தில் உள்ள விவசாயிகளுக்கு  அறிவுரை வழங்குவதற்கு  “யுனைடெட் சீக்” என்ற தனியார்  தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஓ) அங்கு சென்றுள்ளது.

தற்போது இந்த அமைப்பு ‘சிங்கு’ எனும் இடத்தில் போராடி வரும்  விவசாயிகளுக்கு உதவி வருகின்றது. இன்னும் சில தினங்களில்  காசிப்பூர் எனும் பகுதிக்கும் செல்ல உள்ளது.  போராட்ட களத்திலும் நிறைய மருத்துவர்கள் உதவிகள் செய்து வருகின்றனர். இருந்தபோதிலும் களத்தில் நிறைய  வயதானவர்கள்  இருப்பதால் அவர்களுக்கு முதலுதவி வழங்குவதற்கும் அறிவுரை கூறுவதற்கும் இந்த அமைப்பைச்  சேர்ந்தவர்கள் உதவுகிறார்கள்.  அங்கு போராடி கொண்டிருந்த விவசாயி குருக்ஷேத்ரா தனது மணிக்கட்டையை கத்தியால் வெட்டிக் கொண்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காயங்களுடன் தப்பித்தார். தற்போது அவரும் இந்த அமைப்பினருடன் சேர்ந்து கள பணி ஆற்றி வருகின்றார்.

அந்த அமைப்பை சேர்ந்த ஜாஸ்மீத் சிங்கிடம்  (45) இது குறித்து கேட்டபோது, ”  சிங்கு மற்றும் குர்முகி ஆகிய பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு  துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளை வைத்தோம். விவசாயிகளுக்கு ஏதேனும் மனநல பிரச்சினைகள் இருந்தால்  முன்வருமாறு ஊக்குவித்தோம். மன அழுத்தத்தில் தற்கொலை செய்ய முயற்சித்த  குருக்ஷேத்ரா என்பவரை காப்பாற்றியுள்ளோம். தற்போது அவரும் எங்களோடு இணைந்து செயல்படுகிறார். இங்கு போராடும் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினரை பிரிந்து உள்ளதால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. எனவே நங்கள் அவர்களை அழைத்து ஆலோசனை வழங்கி வருகின்றோம்” என அவர் தெரிவித்தார்.

சிங்குவில் ஆலோசனை வழங்குபவர்களில்  சன்யா கட்டாரியாவும்  (26) ஒருவர். இவர் நொய்டாவின் அமிட்டி பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வருகிறார். மற்றும் மருத்துவ உளவியலாளராக பணியாற்றுகிறார். அவரோடு மன்மீத் கவுர் (26) என்பவரும் களத்தில் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றார். இவர்கள் விவசாயிகளுக்கான அமர்வுகளை நடத்தி ஆலோசனை வழங்கி வருகின்றனர்

இந்த அமர்வுகளை பற்றி சன்யா கட்டாரியாவிடம் கேட்டபோது,” தங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதால் மன அழுத்தம், மற்றும் தீராத  கோபத்தில் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு அமர்வுகளை நடத்தி ஆலோசனை வழங்கிறோம். இதுவரை 50 முதல் 60 விவசாயிகளை சந்தித்துள்ளோம். அதில் 15 முதல் 20 விவசாயிகளுக்கு சரியான சிகிச்சை அளித்துள்ளோம். இங்கு இருக்கும்  விவசாயிகள் போராட்ட களத்திற்கு வந்து  40 நாட்கள் ஆகிவிட்டது. அவர்கள் முறையான தூக்கம் இல்லாதால் சோர்வு, மன அழுத்தம், மற்றும்  எரிச்சல் அடைந்துள்ளனர். எனவே அவர்களுக்கு முறையான ஆலோசனை வழங்கி வருகின்றோம்” என்கிறார் அந்த  மருத்துவ உளவியலாளர்.

‘இங்கு போராடுபவர்களில் பலர் வயதானவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களால் இங்கு நிலவும் கடுங்குளிரை தாங்க முடிவதில்லை. எனவே அவர்களுக்கு கால் மசாஜர்கள் மற்றும் பிசியோதெரபி உபகரணங்களுடன் வந்துள்ளோம் என்கிறார்’ கனடாவின் கல்சா சேவா சொசைட்டியைச் சேர்ந்த மருத்துவர்  ஹர்விந்தர் பாஸி (26). இவர் விவசாயிகளுக்காக காசிபூரில் முகாம்  அமைத்துள்ளார் . அதோடு வயதானவர்களுக்கு  எலும்பு மற்றும் தசை பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு உதவியும் வருகின்றார்.

போராட்டத்தில் 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அதில்  ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த சாண்ட் பாபா ராம் சிங் (65). இவர் குண்ட்லி எனும் இடத்தில்  தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தார்.  பஞ்சாபின் பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த அமர்ஜித் சிங் ராய் (63) என்பவர் திக்ரி எனுமிடத்தில் பூச்சிக்கொல்லியை உட்கொண்டு இறந்தார்.  காஷ்மீர் சிங் தாஸ் (70 -79) காசிப்பூரில் நடந்த  போராட்டத்தில்  தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டர்.  பஞ்சாபின் டார்ன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சன் சிங் என்பவர், சிங்கு எல்லையில் பூச்சி கட்டுப்பாடு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

https://tamil.indianexpress.com/india/delhi-farmers-protest-news-in-tamil-counselling-for-whor-are-at-delhi-formers-protest-241483/