ஞாயிறு, 31 ஜனவரி, 2021

கர்நாடகா – மகாராஷ்ட்ரா எல்லைப் பிரச்சனை அன்றும் இன்றும்!

 The Maharashtra-Karnataka border dispute – the past and the present :  இந்த வார துவக்கத்தில் மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவும் தேசிய காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவர் ஷரத் பவாரும் இணைந்து மாநில அரசின் புத்தகம் ஒன்றை வெளியிட்டனர். மகாராஷ்ட்ரா கர்நாடகா சீமவத் : சங்கர்ஷ் ஆனி சங்கல்ப் (மகாராஷ்ட்ரா கர்நாடகா எல்லைப் பிரச்சனை : போராட்டமும் உறுதிமொழியும்) என்ற புத்தகத்தை வெளியிட்டனர்

மராத்தி மொழி பேசும் மக்களை அதிகமாக கொண்ட கர்நாடக பகுதிகள் மகாராஷ்ட்ராவிடம் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகள், கட்டுரைகள் அடங்கிய இதழியல் தொகுப்பு இந்த புத்தகமாகும். உச்ச நீதிமன்றம் இந்த இடம் தொடர்பாக தீர்ப்பினை வழங்கும் வரை இப்பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று தாக்கரே கூறினார். மிகவும் எச்சரிக்கையுடன் பேசிய பவார், உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பினை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரம் 2004ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதி

ஔரங்கபாத்தின் பெயர் மாற்றம் போன்ற பிரச்சனையாக இல்லாமல் இந்த பிரச்சனை அவ்வபோது தோன்றும். மகாராஷ்ட்ரா-கர்நாடகா எல்லையில் உள்ள 7000 சதுர கி.மீ நிலபரப்பை உரிமை கோரியுள்ளது. பெலகவி, உத்தர கன்னடா, பிதார், குல்பர்கா மாவட்டங்களில் உள்ள 814 கிராமங்கள், பெலகவி, கர்வார், நிப்பானி உள்ளிட்ட டவுன்களும் இதில் அடங்கும். இந்த பகுதி மராத்தி பேசும் மக்களை அதிகம் கொண்டுள்ளது என்பதால் மகாராஷ்ட்ரா இந்த பகுதிகளை தங்களின் மாநிலத்தோடு இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

1956ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதில் இருந்தே இந்த பிரச்சனை ஏற்பட்டவன்னம் உள்ளது. முன்னாள் பம்பாய் பிரசிடென்ஸி ஒரு பன்மொழி மாகாணமாக செயல்பட்டது. அப்போது கர்நாடகாவின் விஜயபூரா, பெலகவி, தர்வாத், மற்றும் உத்திரகன்னடா ஆகிய பகுதிகளையும் அது உள்ளடக்கியது. 1948ம் ஆண்டு, மராத்தி அதிகம் பேசும் மக்களைக் கொண்ட பெல்காம் முனிசிபாலிட்டி தங்களை மகாராஷ்ட்ராவுடன் இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

ஆனாலும் 1956ம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டம் பெல்காம் மற்றும் பம்பாய் மாநிலத்தின் 10 தாலுகாக்களையும் மைசூர் மாநிலத்தோடு இணைத்தது. மைசூர் மாநிலம் 1973ம் ஆண்டு கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எல்லைகளை நிர்ணயிக்கும் போது, மாநில கமிஷனின் மறுசீரமைப்பு மைசூரில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கன்னட மொழி பேசும் மக்கள்தொகை கொண்ட தாலுகாக்களை சேர்க்க முயன்றது. ஆனால் மைசூரில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பகுதிகள் அனைத்திலும் கன்னட மொழி பேசுபவர்களைக் காட்டிலும் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிக அளவில் இருந்தனர்.

எல்லைப் பகுதிகளை மகாராஷ்ட்ர மாநிலத்தோடு இணைக்க அன்று அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தன. ஒவ்வொரு தேர்தல் அறிக்கையின் போதும் காங்கிரஸ், என்.சி.பி., சிவ சேனா மற்றும் பாஜக என்று ஒவ்வொரு கட்சியும் இந்த சர்ச்சைக்குரிய பகுதிகளை மகாராஷ்ட்ராவுடன் இணைப்பது தொடர்பாக அறிவித்திருப்பார்கள். கடந்த 60 ஆண்டுகளில் ஒவ்வொரு கவர்னர் உரையின் போதும் எல்லைப் பிரச்சனை பற்றி குறிப்பிடும் போது கட்சி உறுப்பினர்கள் உரத்த கைதட்டல்களுடன் வரவேற்பதுண்டு.

சமீபத்திய நிகழ்வுகள்

மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவரும் கடந்த 13 மாதங்களில் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவது இது ஒன்றும் முதன்முறையல்ல.

சட்டமன்றத்தில் கர்நாடகா ஆக்கிரமிப்பு செய்த மகாராஷ்ட்ரா பகுதிகள் என்று இந்த பகுதிகளை முதல்வர் தாக்கரே கூறிய பின்பு சில நாட்களுக்கு கோலாப்பூரில் இருந்து பெல்காமிற்கான பேருந்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிராவுக்கு ஆதரவாக விரைவாக தீர்வுகள் கிடைக்க உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவை மேற்பார்வையிடும் மூத்த அமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் சாகன் புஜ்பாலை அறிவித்தார்.

கடந்த ஆண்டு, கர்நாடக தினம் கொண்டாடப்படும், நவம்பர் 1ம் தேதி அன்று மகாராஷ்ட்ரா அமைச்சர்கள் அனைவரையும், கர்நாடகாவில் மராத்தி பேசும் மக்களுக்கு ஆதரவாக கறுப்பு நிற பேண்டை அணிந்து வர வேண்டும் என்று மகாராஷ்ட்ர அரசு கேட்டுக்கொண்டது.

மகாஜன் ஆணையம்

எல்லைப் பிரச்சனையில் மகாராஷ்ட்ர அரசு வன்முறையை தூண்ட முற்படுவதாக கர்நாடகாவின் பாஜக அரசு குற்றம்சாட்டியுள்ளது. கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ஒரு அங்குல நிலத்தையும் விட்டுத்தர முடியாது என்று உறுதி எடுத்துள்ளார். மகாஜன் ஆணையம் வெகு ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

மகாஹன் ஆணையம் இந்திய அரசால், இந்த பிரச்சனை குறித்து ஆராய 1966ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த ஆணையம் ஆகஸ்ட் மாதம் 1967ம் ஆண்டு சமர்பித்த அறிக்கையில் 264 கிராமங்கள் மகாராஷ்ட்ராவுடன் இணைக்கப்பட வேண்டும். பெல்காம் உள்ளிட்ட 247 கிராமங்கள் கர்நாடகாவுடன் இருக்க வேண்டும் என்றும் அந்த ஆணையத்தின் தலைவராக இருந்த இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

மகாராஷ்ட்ரா இதனை நிராகரித்ததோடு, இது ஒரு பக்கத்தினருக்கு மட்டும் ஆதரவாக செயல்படுகிறது. நியாயம் அற்றது என்றும் கூறியது. ஆனால் கர்நாடகா இதனை வரவேற்றது. கர்நாடகாவின் கோரிக்கைகள் இருந்த போதிலும் அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இந்த வாரத்தின் துவக்கத்தில், இந்த ஆணையத்தின் அறிக்கை முற்றிலும் மகாராஷ்ட்ராவிற்கு எதிரானது என்றார்.

பாஜகவின் குழப்பம்

ஔரங்கபாத் பெயர் மாற்றத்தில் தாக்கரேவை ஓரங்கட்ட பாஜக முயன்ற போது, பழைய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று சவால் விடுத்தது. தற்போது எல்லை விவகாரத்தில் தன்னுடைய முன்னாள் கூட்டாளிக்கு பதிலடி கொடுக்க நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது.

மகாராஷ்ட்ரா காங்கிரஸ் நீண்ட காலமாக இது குறித்து பேசவில்லை. கர்நாடகாவில் தன்னுடைய கட்சிக்கும், ஆட்சிக்கும் பிரச்சனையை தூண்டும் வகையில் எதுவும் பேசிவிடக்கூடாது என்று எச்சரிக்கையாக உள்ளது பாஜக. இருப்பினும் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மராட்டி பேசும் மக்கள் உள்ள எல்லைப்பகுதியை மகாராஷ்ட்ராவுடன் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்ட்ர பாஜக விரும்புகிறது என்று கூறியுள்ளார்.

“ஆட்சியில் இருக்கும் கட்சியைப் பொருட்படுத்தாமல், இரு மாநிலங்களும் ஆரம்பத்தில் இருந்தே தங்கள் நிலைப்பாடுகளில் உறுதியாக உள்ளனர். மகாராஷ்டிரா பாஜகவின் நிலைப்பாடு மாறாமல் உள்ளது, ”என்று ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.

source: https://tamil.indianexpress.com/explained/the-maharashtra-karnataka-border-dispute-the-past-and-the-present/