ஞாயிறு, 24 ஜனவரி, 2021

விவசாயிகளுக்கு மத்தியில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்த திட்டம்: பிடிபட்ட இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்

 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று டெல்லியில் உள்ள சிங்கு பார்டர் பகுதியில் நடைபெறும் போராட்டத்தில் கலவரம் செய்ய வந்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் போராட்ட களத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும், போராட்டத்தில் கலவரத்தை மேற்கொள்ளவும், சுதந்திர தின விழா அன்று நடக்கவுள்ள டிராக்டர் பேரணியை தடுக்கவும் பயிற்சி கொடுத்து அனுப்ப பட்டதாகக் விவசாயிகளிடம் கூறியுள்ளார். பெயர் வெளியிடப்படாத அந்த இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளால்  ஊடகத்தின் முன் நிறுத்தப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டார். அதன் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

முதலில் அந்த இளைஞரை, பெண் ஒருவரை கேலி செய்ததற்காக விவசாயிகள் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த இளைஞர் போராட்டத்தில் கலவரம் செய்யவே வந்துள்ளார் என்பது விசாரணைக்குப் பின் தான் தெரிய வந்துள்ளது.

ஊடகத்தினரை சந்தித்தபோது அந்த இளைஞர் கூறியதாவது: “இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்த வந்துள்ளோம். எங்களுக்கு காவலர் உடையில் இருந்த ஒருவரே பயிற்சி அளித்தார். விவசாயிகளின் போராட்டத்திற்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் போராட்டம் நடக்கும்போது சுப்பாக்கி சூடு நடத்த திட்டமிட்டு இருந்தோம். 2016-ம் ஆண்டு நடைபெற்ற ‘ஜாட்’ போராட்டத்தின் போதும், கர்னல் மாவட்டத்தில் நடந்த பேரணியின் போதும் இது போன்ற கலவர செயல்களில் ஈடுபட்டேன்” என்று அந்த இளைஞர் கூறினார்.

ஊடகத்தினரை சந்தித்து பேசிய விவசாய சங்க தலைவர்கள், “ஜனவரி 26-ம் தேதி சுதந்திர தின விழா, அன்று நடக்கும் போராட்டத்தில் விவசாயிகள் போலீசாரைச் சுட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி கலவரத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். அதோடு டிராக்டர் பேரணியின் போது தேசீய கொடியை தீயிட்டு கொளுத்தி எங்களுக்கு களங்கம் விளைவிக்க சதி செய்துள்ளனர்.  மற்றும் விவசாய சங்க தலைவர்கள் நான்கு பேரின் புகைப்படத்தை வைத்துள்ளனர். ஜனவரி 23-ம் தேதிக்கு பிறகு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர்கள் கொல்லப்படலாம்”என்று கூறியுள்ளனர்.

 

source https://tamil.indianexpress.com/india/plot-to-incite-violence-at-delhi-singhu-border-farmer-protest-a-youth-caught-243772/