சனி, 16 ஜனவரி, 2021

மழைக்கும் வெயிலுக்கும் தார்ப்பாய் குடிசை தான்… தமிழக பளியர்களின் இன்றைய நிலை என்ன?

 இந்தியாவில் வாழும் பழங்குடி மக்களின் நிலை மிகவும் மோசமானதாகவே இருக்கிறது. தமிழகத்தில் மலையோரம், காடுகளுக்குள் வாழும் பழங்குடி மக்களின் நிலை இன்னும் வேதனை தரும் வகையிலேயே அமைந்துள்ளது. காடுகள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு, காடுகளை மட்டுமே நம்பி இருந்த பழங்குடி மக்களின் நிலைமை மிகவும் மோசமானதாக மாறியது. சுதந்திரம் அடைந்த பிறகும் கூட நிலை சிறப்புறவில்லை. மாறாக அவர்களை விளிம்பு நிலை மனிதர்களாக மாற்றியது. கொசவனம்பட்டி காட்டிற்குள் இருந்து வெளியேற்றப்பட்ட பளியர் இன மக்கள், கொடைக்கானல் சாலையோரம் அமைந்திருக்கும் வாழைகிரி பகுதிக்கு தள்ளப்பட்டனர்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே தார்ப்பாய் குடிசைகளில் தங்கி வரும் பளியர் பழங்குடியினருக்கு வன உரிமை சட்டத்தின் கீழ் வனமும், வீட்டு நிலமும் வழங்க வேண்டும் என்று போராடி வருகிறார் மல்லிகா. 28 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இங்கே, இம்மக்களின் நலனிற்காக பணியாற்றி வருகின்றேன். ஆனாலும் கூட அவர்களுக்கு வீடு கிடைக்காத நிலை மனதை கவலை கொள்ள வைக்கிறது என்று கூறினார்.

“ரேசன் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுரிமை எல்லாம் இருக்கிறது. ஆனால் தங்க ஒரு வீடில்லை. சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு தார்ப்பாய் குடிசையில் வசித்து வருகின்றோம். ஆண்களும் பெண்களும் காலைக்கடனுக்கு காடுகளுக்குள் ஒதுங்குகின்றோம். மழை காலங்களில் பூச்சி பட்டை வருவதோடு, பாம்பும் கூட வருகிறது. ஒரு தார்ப்பாய் வாங்கவும், சோலார் லைட் வாங்கவும் கூட நாங்கள் அரசை நம்பாமல், வெளியாட்களை நம்பி இருக்கின்றோம்” என்கிறார் அவர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் பேசிய அவர், நாங்கள் கேட்பது வேறொன்றுமில்லை. வன உரிமை சட்டத்தின் படி எங்களுக்கு நிலங்களை ஒதுக்கினால் போதும். எங்களுக்கு மட்டும் அல்ல, தமிழகத்தில் வறுமையில் வாடும் அனைத்து பழங்குடி மக்களுக்கும் இதே உதவியை அரசு மனம் உவந்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

காஃபி தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும் அவர்களின் குழந்தைகள் கல்வி கற்க ஊத்தில் இருக்கும் பள்ளிக்கு செல்கின்றனர். அங்கன்வாடி ஏதும் இல்லாத காரணத்தால் பூலத்தூரில் இருந்து வரும் ஆசிரியர் சாலையில் அமர்ந்து பாடம் நடத்துவது வேதனையாக அமைந்துள்ளது. காஃபி மட்டும் அல்லாமல், சிறுவனமகசூலாக அவர்கள் கல்பாசி, காஃபி, கடுக்காய், நெல்லிக்காய், தேன், ஈச்சமர துடைப்பம் ஆகியவற்றை விற்று வருகின்றனர்.

”என் தாத்தா இந்த இடத்திற்கு வந்து 60 ஆண்டுகள் ஆனது. அவர் என்னைப் போன்று முன்பே போராடி இருந்தால், நான் என் பிள்ளைகளுக்காக, இப்படி பலரின் கையை ஏந்தும் நிலை ஏற்பட்டிருக்காது. இன்று நான் போராட காரணம், நாளை என்னுடைய பிள்ளைகள் என் போல் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்பதற்காக தான்” என்று கூறினார் மல்லிகா.

https://tamil.indianexpress.com/tamilnadu/check-the-living-conditions-of-paliyar-tribes-in-vazhaigiri-kodaikanal-242596/