செவ்வாய், 26 ஜனவரி, 2021

டிராக்டர் பேரணியில் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. டெல்லியில் பதற்றம்


Farmer’s Tractor Rally Delhi Tamil News : சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளுக்கு அருகிலுள்ள விவசாயிகள் இன்று காலை தேசிய தலைநகருக்குள் நுழைய போலீஸ் தடுப்புகளை உடைத்தனர். மேலும், போராட்டத்தில் ஒரு பகுதியாக விவசாயிகள் நடைப்பயணமாகவும் டிராக்டர்களிலும் அணிவகுத்துச் செல்கின்றனர். ராஜ்பாத்தில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பின்னரே விவசாயிகளின் போராட்டத்தைத் தொடங்கவேண்டும் என்கிற நிபந்தனையின் பேரில் டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு நடத்த விவசாயிகளுக்கு காவல்துறை அனுமதி அளித்தது. ஒப்பந்தத்தின்படி, விவசாயிகள் எல்லைகளிலிருந்து டெல்லிக்குள் நுழைய வேண்டும் மற்றும் எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும் என்றும் மத்திய டெல்லியை நோக்கிச் செல்லக்கூடாது என்றும் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் டிராக்டர் பேரணி, கிசான் பரேட் முடிந்து, பகல் 12 மணிக்குப் பிறகு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், காலை 8 மணியளவில் எல்லைகளில் பெரும் கூட்டம் கூடியது. டெல்லி மற்றும் ஹரியானாவைப் பிரிக்கும் சிங்கு எல்லையிலும், தேசிய தலைநகரின் மேற்கு பகுதியில் உள்ள திக்ரி எல்லையிலும் தற்போது சலசலப்பு அதிகமாக உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் கொடிகளுடன் அணிவகுத்துச் சென்றுள்ளனர். அவர்களில் பலர் டிராக்டர்களிலும் அணிவகுத்துச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

நவம்பர் பிற்பகுதியில் தொடங்கிய புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் மையப்பகுதியாக குடியரசு தினத்தன்று பெரேடுக்கு இடையில் சிங்கு எல்லைக்கு அருகே 5,000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், முன்னோக்கி அணிவகுத்துச் செல்ல பிடிவாதமாக இருந்தனர். திக்ரியில், விவசாய தலைவர்கள் போராட்டக்காரர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். பேரணியின் நேரத்தைத் தீர்மானிக்க, பிரதிநிதிகள் போலீசாருடன் ஓர் கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து “எங்கள் பேரணி அமைதியானதாக இருக்கும், நாங்கள் ஒதுக்கப்பட்ட பாதைகளில் இருப்போம்” என்றும் விவசாய சங்கம் உறுதியளித்தது. இருப்பினும் தற்போது காவல்துறையினரின் தடுப்புகளை உடைத்து டிராக்டர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது டெல்லியில் சலசலப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

source https://tamil.indianexpress.com/india/farmers-tractor-protest-against-new-law-in-delhi-tamil-news-244186/