ஞாயிறு, 24 ஜனவரி, 2021

வேளாண் சட்டத்தை நிறுத்திவைக்க ஒப்புதல்: மத்திய அரசு முடிவுக்கு 5 காரணங்கள்

 புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் பல விவசாய சங்கங்கள் இணைந்து போராட்டத்தை நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தை முடிவுக்குக்  கொண்டுவர  18 மாதங்கள் விலக்கு அளிக்க போவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களிடம் மத்திய அரசின் குழு தெரிவித்திருந்தது. இது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு தங்களின் முடிவை கூறுவதாக  விவசாய சங்கங்கள் தெரிவித்திருந்தன. அதன்படி கடந்த வியாழக் கிழமையன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, மத்திய அரசின் குழு முன்மொழிந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள விவசாய சங்கங்கள் மறுத்துவிட்டன.

இதற்கிடையில், ‘பாராளுமன்ற பட்ஜெட் தாக்கலின் போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, இந்த சட்டத்திற்கு எதிராக வலுவான எதிர்ப்பை தெரிவிக்கும். எனவே விவசாயிகள் போராட்டம் குறித்து சரியான முடிவை எடுக்க வேண்டும்’ என ஆர்எஸ்எஸ் தலைமை வலியுறுத்தி இருந்தது.

மத்திய அரசின் குழு புதிய வேளாண் சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து 18 மாதங்கள் விலக்கு அளித்தற்கான 5 முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தடை:

பொதுவாக பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை வழங்காது.
ஆனால் புதிய வேளாண் சட்டத்திற்கு ஜனவரி 12-ம் தேதி இடைக்கால தடை வழங்கியது. இந்த இடைக்கால தடையை எதிர்பார்த்திராத  மத்திய அரசு, நிபுணத்துவம் வாய்ந்த குழு ஒன்று அமைத்து போராட்டத்திற்கு தீர்வு காண்போம் என்று கூறியிருந்தது. அதன் படி மத்திய அரசின் குழு விவசாய சங்கங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆனால் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்திய பிறகும், மத்திய அரசின் குழு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இயலவில்லை.  இதையடுத்தது அரசியல் கட்சியின் தலைவர்கள் பலர், மத்திய அரசு ‘நீதி மன்ற அவமதிப்பு’ செய்கிறது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் தலைமை வெளியிட்ட அறிக்கை:

இது குறித்து ஆர்.எஸ்.எஸ் சர்கார்யாவா (பொதுச் செயலாளர்) சுரேஷ் பய்யாஜி ஜோஷி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியதாவது:
“இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஒரு பொதுவான மையத்திற்கு வரவேண்டும். அப்போது தான் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இயலும். ஒரு போராட்டம் நீண்ட காலமாக நீடிப்பது சமூகத்தில் ஆரோக்கியமான ஒன்றாக இருக்காது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பொறுத்தவரை போராட்டம் விரைவில் முற்றுப் பெற வேண்டும்.

“இந்த புதிய சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு விருப்பம் இல்லை. இது போன்ற பிரச்சனைகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தலையீட்டு கருத்து கூறுவதை கட்சியில் சிலருக்கு பிடிக்கவில்லை. இது தொடர்ந்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் கட்சிக்கும் மேலும் பிளவை ஏற்படுத்தும்” என்கிறார் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்.

ஆர்எஸ்எஸ் தலைமையின் இந்த அறிக்கை, பாஜக-வில் இருக்கும் சிலருக்கு புதிய வேளாண் சட்டத்திற்கான எதிராக குரல் எழுப்ப தைரியமூட்டும் வகையில் அமைந்துள்ளது:

இந்த புதிய சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து நீண்ட விவாதங்கள் வேண்டும் என பல கட்சித் தலைவர்கள் சுட்டிக் காட்டி இருந்தனர். அப்படி விவாதங்கள் நடைபெற்று இருந்தால் இந்த சட்டத்திற்க்கான எதிர்ப்பு குறைந்திருக்கும்.

டிராக்டர் பேரணி:
விவசாய சங்கங்கள் டிராக்டர்கள் மூலமாக பேரணியாக சென்று தலைநகர் டெல்லியை குடியரசு தின விழா அன்று முற்றுகையிட உள்ளார்கள். இது குறித்து டெல்லி அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.

“குடியரசு தினத்தன்று தலைநகரில் டிராக்டர் பேரணி என்பது அரசுக்கு அவமரியாதையை தரும். எனவே இந்த போராட்டத்திற்கு தற்காலிகமாக முடிவு எடுக்கும் நிலையில் அரசு உள்ளது. அதோடு குடியரசு தினத்தன்று நடத்தப்படும் அணிவகுப்பை அது மறைத்து விடும், அது அரசுக்கு மிகப்  பெரிய அவமரியாதையாக அமையும்” என்று அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர்:

ஜனவரி 29 முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அப்போது புதிய வேளாண் சட்டம் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து எதிர்க் கட்சிகள் கண்டிப்பாக கேள்விகள் எழுப்ப உள்ளன.

“விவசாயிகள் போராட்டத்திற்கு பல கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இது ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்க வழி வகுக்கும். மத்திய அரசு இந்த போராட்டத்திற்கு தற்காலிக விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. அப்படி இந்த சட்டத்திற்கு  தற்காலிக விலக்கு அளிப்பதன் மூலம், இனி இயற்றப்படும் எல்லா சட்டத்திற்கும் விலக்கு அளிக்க வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்படும்” என்று மற்றொரு அரசியல் கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.

source  https://tamil.indianexpress.com/explained/5-reasons-why-central-government-to-put-farm-laws-on-hold/