Rakesh Tikait : டெல்லி காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி பின்னர் விவசாய தலைவராக மாறிய 51 வயது ராகேஷ் திகைத் 2019ம் ஆண்டு லோக் சபா தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்தாக ஒப்புக் கொண்டார். அவரைப் போன்றே ஜாட் சமூகத்தினர் அதிகம் இருக்கும் முசாஃபர் நகரின் சிசௌலி கிராமத்தினர் பலரும் பாஜகவிற்கு வாக்களித்தனர். ஏன் என்றால் அங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்ட மத்திய அமைச்சர் சஞ்சீவ் குமார் பால்யனும் கூட, ராகேஷின் அண்ணன் நரேஷ் தலைமை வகிக்கும் பாலியன் காப் குலத்தை சேர்ந்தவர்.
ராகேஷ் திகைத் சிறப்பான அரசியல் பின்னணியை கொண்டிருக்கவில்லை. 2007ம் ஆண்டு யு.பி. சட்டமன்ற தேர்தலில் கத்தௌலி தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் நின்று ஆறாம் இடத்தையே பிடித்தார். 2014ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ராஷ்ட்ரிய லோக் தால் கட்சி வேட்பாளாராக அம்ரோஹாவில் நின்று, வெறும் 9,539 வாக்குகள் பெற்று, டெபாசிட் இழந்தார்.
தற்போது பரபரப்பை கூட்டியிருக்கும் மோடி அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக கூட சமீபகாலம் வரை திகைத்தின் பி.கே.யூவினர் குறைவான அளவிலேயே போராட்டம் நடத்தினார்கள். அது அவர்களின் போட்டியாளரான வி.எம்.சிங்கின் கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய கிஷான் மஸ்தூர் சங்கதன் அமைப்பின் போராட்டக்காரர்களைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது. பலரும், திகைத் மத்திய அரசால், விவசாய சங்கங்களை நடுநிலையாக்க அனுப்பப்பட்டவர் என்றும் கூறினர்.
ஆனால் அனைத்தும் வியாழக்கிழமை மாலை காசிப்பூரில் திகைத் நடத்திய உரையின் போது முற்றிலும் மாறியது. உள்ளூர் நிர்வாகம் போராட்ட முகாமை காலி செய்ய வேண்டும் அல்லது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு அந்த உரையை நிகழ்த்தினார். அந்த உரையில் அவர், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யவில்லை என்றால் தூக்கிட்டுக்கொள்வதாக அவர் மனமுடைந்து அழுத வீடியோ வைரலாக பரவியது. அப்போது ”ஹர் கிஷான் ரோயா ஔர் ஷபி கோ மஹேந்திர் சிங் ஜி யாத் ஆயா” (மனம் உடைந்து அழுத விவசாயிகள் பி.கே.யுவின் நிறுவனர் மகேந்திர சிங் திகைதை நினைத்துக் கொண்டனர்) என்று ரஜ்விர் சிங் முண்டெட் கூறினார். அவர் ஷாம்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சமூக செயற்பாட்டாளார் ஆவார்.
வி.எம்.சிங் தற்போது போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டதால், மேற்கு உ.பியின் மறுக்க முடியாத விவசாய தலைவராக மாறிவிட்டார். ஆர்.எல்.டி தலைவர் சௌதிரி அஜித் சிங்கும் உடன் இணைந்ததால் அவர்களின் பலம் அதிகரித்துள்ளது. அவர் திகைத் குடும்பத்தினருடன் ஒரு நல்ல உறவை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் நடைபெற்ற அதே நாள் இரவில் திகைத்தை தொலைபேசியில் அழைத்து பேசினார். மேலும் அண்டை மாநிலங்களில் இருக்கும் ஜாட் தலைவர்களின் ஆதரவையும் அவர் பெற்றார். குறிப்பாக, இந்திய தேசிய லோக் தளத்தின் அபய் சிங் சௌதலா மற்றும் ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சியின் ஹனுமன் பெனிவலும் இதில் அடங்குவர்.
அது ஒரு உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வு. அரசால் அவருக்கு ஏற்பட்ட அவமானத்தை அனைவரும் தனக்கே ஏற்பட்டதாக நினைத்தனர். அதனால் தான் உ.பி. மேற்கு மட்டும் அல்லாமல் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், மற்றும் டெல்லியில் இருந்தும் விவசாயிகள் அவருக்காக ஒன்றிணைந்தனர். 1987-88க்கு பிறகு இது போன்று நடைபெறவில்லை என்று முண்டெட் கூறினார்.
மாநில அரசு மின்சார கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்திய அதே சமயத்தில் தான் 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் முசாஃபர் நகரில் இருக்கும் கர்முகேரா பவர் ஹவுஸில் மகேந்திர சிங் திகைத் நான்கு நாட்கள் தர்ணா போராட்டத்தை துவங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து ஒரு வருடம் கழித்து மீரட் கமிஷனரேட்டின் 24 நாள் கெராவ் (உத்தியோகபூர்வ கரும்பு விலையை ரூ .27 லிருந்து 35 / குவிண்டால் வரை உயர்த்தியதற்காக) நடைபெற்றது. அதனை தொடர்ந்து 1988ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 லட்சம் விவசாயிகள் புதுடெல்லி போட்க்ளபில் பேரணி நடத்தினர்.
இருப்பினும் மூத்த பத்திரிக்கையாளர் ஹர்விர் சிங் இந்த சூழல்கள் வேறுபட்டவை என்று உணர்ந்தார். எழுபதுகள் மற்றும் 80களில் புதிய ரக கரும்பு, கோதுமையினால் கிடைத்த நல்ல மகசூல் விவசாயிகளை ஒப்பீட்டளவில் செழிப்பாக வைத்திருந்தது. அப்போது அரசு பணிகள் இருந்தன. அன்றைய சூழலில் அடிப்படை கல்வி கற்றவர்களுக்கும் கூட வேலை இருந்தது. ராணுவம், காவல்துறை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம அளவில் பணியாளர்கள் இருந்தனர். பி.கே.யுவின் கிளர்ச்சிகள் அந்த ஆதாயங்களை பாதுகாப்பதாகவே இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய போராட்டங்கள், நல்ல காலத்தை பார்த்து தற்போது தடம் புரண்டிருக்கும் விவசாயிகளால் நடத்தப்படுகிறது. கரும்பை விட அதற்கு சிறந்த உதாரணம் இல்லை.
உ.பியில் யோகி ஆதித்யநாத் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கரும்பிற்கான அரசு அறிவுறுத்தப்பட்ட விலையை ( state advised price (SAP)) குவிண்டாலுக்கு ரூ. 10 வீதம் உயர்த்தி ரூ. 315ல் இருந்து ரூ. 325க்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 2020-21 பருவத்திற்கான விலையை அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இருந்த போதிலும் கரும்பு ஆலைகள் அக்டோபர் மாத இறுதியில் இருந்து சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. அனைத்திற்கும் மேலாக அவர்கள் விவசாயிகளிடம் இருந்து ரூ. 12,000 கோடிக்கு கரும்பினை கொள்முதல் செய்துள்ளனர்.
உ.பி.யில் விவசாயிகளின் கோபம் மூன்று வேளாண் சட்டங்களைக் காட்டிலும் கரும்பின் விலைக்காகவே உள்ளது. இது தவிர்த்து மின்சார கட்டணங்களை இரட்டிப்பாக்குதல் (நீர்பாசனம் மற்றும் வீட்டு இணைப்பு இரண்டிற்கும்), கடைசி ஒரு வருடத்தில் டீசலின் விலை ரூ. 10 வரை அதிகரித்தது, மேலும் யோகியின் ஆட்சியில் கடுமையாக விதிக்கப்பட்ட கால்நடைகளை கொல்லுதலுக்கான தடை விதிகள் மோசமான சூழலை உருவாக்கியது. அதனால் முப்பது வருடங்களுக்கு முன்பு ராகேஷின் தந்தையை தேர்வு செய்தது போன்று தற்போது அந்த விவசாயிகள் ராகேஷை தேர்வு செய்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/india/a-breakdown-and-the-rise-of-farmer-leader-rakesh-tikait-244928/