வியாழன், 14 ஜனவரி, 2021

உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவின் நான்கு உறுப்பினர்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள்

 பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உச்சநீதிமன்றம் அமைத்த எந்தவொரு குழு செயல்முறையிலும் பங்கேற்க மாட்டோம் என்று  விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்தது.

மேலும், நிபுணர் குழு உறுப்பினர்கள் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர்கள் என்ற விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்தில் தவறு இருப்பாதாய் தெரியவில்லை.

இந்த நான்கு உறுப்பினர்களும் மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பல சந்தர்பங்களில்  வெளிப்படையாகவே கருத்து தெரிவித்திருக்கின்றனர்.  அவர்களில் எவரும் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான கோரிக்கைகளை ஆதரிக்கவில்லை.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்ற கருத்தை நான்கில் மூன்று பேர் பொது வெளியில் பதிவு செய்திருக்கின்றனர்;  வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்ற கருத்தில் அவர்கள் ஒருமனதாக உள்ளனர்.

நான்காவது உறுப்பினரான பூபிந்தர் சிங் மான்,  உழவர் பெருமக்களின்  நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நம்புகிறார். மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலை படிப்படியாக விலக்கி கொள்ளப்பட மாட்டாது என்ற நம்பிக்கையை அளிக்கவும் வாதாடியுள்ளனர். ஆனால், இத்தகைய கருத்துக்கு மத்திய அரசு ஏற்கனவே இசைவு கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில்,அனில் கன்வத் என்ற மற்றொரு குழு உறுப்பினர், வேளாண் துறையை மேலும் தாராளமயமாக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருதுகிறார்.

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கருத்துக்களை பிரதிபலிக்கவோ, பதிவு செய்யவோ குழுவில் உறுப்பினர்கள் இல்லாதிருப்பது விவசாய சங்க பிரதிநிதிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவின் நான்கு உறுப்பினர்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இங்கே

அசோக் குலாட்டி : 

சர்வதேச பொருளாதார உறவுகள் தொடர்பான இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஆர்ஐஇஆர் ) வேளாண் துறைக்கான இன்ஃபோசிஸ் இருக்கை பேராசிரியராக  குலாட்டி பணியாற்றி வருகிறார். 2011 மற்றும் 2014 க்கு இடையே, விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (Commission for Agricultural Costs) தலைவராக பணியாற்றினார்.  இந்த அமைப்பு விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசுக்கு பரிந்துரைகிறது. 2015 ஆம் ஆண்டில், வேளாண் பொருளாதாரத்தில் இவரது சிறப்பான பங்களித்ததற்காக  மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது.

இந்திய வேளாண் துறையில் தனியார் மயம், தாராளமயத்தை தீவிரமாக செயல்படுத்த பல்வேறு காலங்களில்  தனது ஆதரவான நிலைப்பாடை வெளிபடுத்தியவர். மேலும், தற்போது மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை முழு மனதுடன் வரவேற்றதுடன், இது “விவசாயத்திற்கான 1991 தருணம்” என்று குறிப்பிட்டார்.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிக வாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சிறந்த வருமானத்தை ஈட்டவும் உதவும். நுகர்வோரைப் பொறுத்தவரை, வேளாண் விளை பொருட்களில் விலை ஏற்ற-இறக்கம் மிகவும் குறைந்து காணப்படும் என்று கருத்து தெரிவித்தார்.  வேளாண் மதிப்பு மற்றும் விநியோக சங்கிலியை வலுப்படுத்துவதை இந்த சட்டங்கள் உறுதி செய்யும் எனவும் தெரிவித்தார். இந்த 3 சட்டங்களையும், 2019ம் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தகாகவும், தற்போது அதன் எதிர்ப்பு “தனியார் துறைகள் மீதும், பொருளாதார சந்தைகள் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைவதாகவும் தெரிவித்தார்.

“இந்த சட்டங்களின் பயன்களை விவசாயிகளிடம் புரிய வைப்பதில் மத்திய அரசின் தகவல் தொடர்பு யுக்தி  பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. பிரதமர் மோடியின் எதிர்ப்பாளர்கள் இந்த இடைவெளியை பயன்படுத்தி போராட்டக்காரர்களை தவறாக வழிநடத்தி  வருகின்றனர்” என்று வெளிப்படையாக தனது கருத்தை பதிவிட்டார்.

பிரமோத் குமார் ஜோஷி: 

 

ஜோஷி, ஐதராபாத் ஐசிஏஆர்- தேசிய விவசாய ஆராய்ச்சி மேலாண்மை அகாடமியில் இயக்குநராகவும், புதுதில்லியில் உள்ள வேளாண் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு வலுவான ஆதரவாளர். கடந்த டிசம்பரில் தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளிதழில், ” இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் சுதந்திரத்தை அளிக்கிறது. வேளாண் பொருட்களின் சுதந்திரமான போக்குவரத்தையும், தடையில்லா விற்பனையையும் இது ஊக்குவிக்கிறது. இந்த புதிய வேளாண் சட்டங்களை நீர்த்து போக செய்தால், வளர்ந்து வரும் உலகளாவிய வர்த்தகச் சந்தையை இந்திய விவசாயத் துறையால் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகும் ” என்று தெரிவித்தார்.

” பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதிலும், இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பிடிவாதமாக இருப்பது வருந்தத்தக்கது” என்றும் தெரிவித்தார்.

அனில் கன்வத் : 

61 வயதான கன்வத், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷேத்கரி சங்கதானா என்ற விவசாய குழுவின் தலைவராக உள்ளார். திறந்த சந்தைகளுக்கான ஆதரவு என்பது சங்கதானாவின் டி.என்.ஏவில் இருக்கிறது. வேளாண் சீர்திருத்தங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு அரசுக்கு ஆதரவாக வந்த முதல் அமைப்பு இது தான்.

 

 

ஆரம்பத்தில் இருந்தே சந்தைக்கான எளிமையான அணுகல் குறித்து சங்கதானா குரல் எழுப்பி வந்தது. விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு மூல காரணம் அவர்கள் சந்தைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகலில் இருப்பதாக இந்த அமைப்பு நம்புகிறது.  விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயிக்க சந்தைகள் திறந்ததாகவும் போட்டித்தன்மையுடனும் இருக்க வேண்டும். நுகர்வோர் மலிவான விலையில் விவசாயப் பொருட்களை பெறுவதை உறுதி செய்வதற்காக விவசாய விளைபொருட்களின் விலையை அரசாங்கங்கள் வேண்டுமென்றே குறைத்து வருவதாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த அமைப்பை விவசாய தலைவர் சரத் ஜோஷி துவங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

விவசாயத்தில் பி.எஸ்சி. பட்டம் பெற்ற கன்வத், வேளாண் சட்டங்களுக்கு மிகத் தீவிர ஆதராவான நிலைப்பாடை கொண்டுள்ளார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய அவர், “இந்த சட்டங்களை நாங்கள் ஆதரிக்கின்றோம். வேளாண் துறைகளில் அரசின் கட்டுபாடுகளைத் தளர்க்க வேண்டும், திறந்த சந்தைகள்  உருவாக்க வேண்டும் என்று  40 ஆண்டுகளுக்கும் மேலாக  நாங்கள் போராடி வருகிறோம். சுதந்திரத்திற்குப் பிறகு இந்த திசையில் பயணிக்கத் தொடங்கிய முதல் அரசாங்கம் இதுதான்” என்று தெரிவித்தார்.

அனில் கன்வத் ஒரு படி மேலே சென்று, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கக் கூடாது என்ற கோரிக்கையும் வைத்து வருகிறார்.  தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கருத்துக்கு இது மிகவும் நேர்மாறானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பூபிந்தர் சிங் மான் : 

82 வயதான பூபிந்தர் சிங், மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினரும், அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் (ஏ.ஐ.கே.சி.சி) தற்போதைய தலைவருமான ஆவார். இந்த அமைப்பும் சரத் ஜோஷியால் நிறுவப்பட்டது.

 

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவினர் கடந்த மாதம் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து வேளாண் சட்டங்களுக்கு ஆதரவை தெரிவித்தனர்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை இடைத்தரகர்களின் தலையீட்டிலிருந்து வேளாண் சட்டங்கள் பாதுகாக்கும் என்றும்,  வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் குழுக்களுக்கு வெளியே விவசாயிகள் சுதந்திரமாக தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய இந்த சட்டம் வழிவகை செய்வதை உறுதி செய்யும் என்றும் அவர்கள் அப்போது தெரிவித்தனர்.

முன்னதாக, மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள்; அரசியல் சாசன ரீதியாக சரியானதா என்பது குறித்தும் விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்று கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி திரு எஸ் ஏ போப்தே, நீதிபதிகள் திரு போபண்ணா, திரு ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

souce: https://tamil.indianexpress.com/india/sc-committee-of-agricultural-experts-have-backed-farm-laws-delhi-farmers-protest-242290/