தென் கொரியாவின் வரலாற்றில் முதல்முறையாக, கடந்த ஆண்டில் பதிவான இறப்பு விகிதம் மொத்த பிறப்பு விகித எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது. இதன் மூலம், நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி குறையத் தொடங்கியது. 2020 ஆம் ஆண்டில், தென் கொரியாவில் சுமார் 3.07 லட்சம் பேர் மரணம் அடைந்தனர். குழந்தை பிறப்பு எண்ணிக்கை 2.75 லட்சம் ஆக உள்ளது. 2019 உடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பிறப்பு விகித எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் இறுதியில், நாட்டின் மக்கள் தொகை 5,18,29,023 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 20,838 குறைவாகும்.
தென் கொரியா நாட்டில் ஏன் இந்த நிலை?
உலகின் பல பகுதிகளில், அதிக பொருளாதார வளர்ச்சி மொத்த கருவுறுதல் விகிதம் (டி.எஃப்.ஆர்), பெரும்பாலும் இணைந்தே பயணிக்கிறது.
அதிக தொழில்மயமான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் தென் கொரியாவில், 2019ம் ஆண்டில் பிறப்பு விகிதம் 0.92 ஆகத் தான் இருந்தது. இது, உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதமாகும். தற்போதுள்ள மக்கள் தொகையை தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய சராசரி பிறப்பு விகிதத்தை பிரதிபலிக்கும் மாற்று நிலை கருவுறுதல் விகிதத்தை (2.1) விட (Replacement fertility rate – டி.எப்.ஆர் விகிதம்) அந்நாட்டில் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது.
2010 ல் 1.49 சதவீதமாக இருந்த பிறப்பு விகிதம், 2019ல் 0.05 சதவீதமாகக் குறைந்ததாக கார்டியன் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த போக்கு நீண்ட காலம் தொடர்ந்தால், தற்போதைய 5.18 மக்கள் தொகை 2067 க்குள் 3.9 கோடியாகக் குறையும் என்று அரசாங்கம் கணித்துள்ளது. மொத்த மக்கள் தொகையில், 64 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 46 சதவீதமாக இருக்கும் .
ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படும் அசாதாரண போக்கு காரணமாக இளம் தம்பதிகள் வீடு வாங்குவதற்கும் குடும்பத்தை நிர்வகிக்கும் தயக்கம் காட்டி வருகின்றனர். மகப்பேறு விடுப்பைத் தேர்வு செய்யக்கூட தயங்குவதாகவும் கார்டியன் செய்திக் குறிப்பு தெரிவித்தது
அரசின் முயற்சிகள்:
நாட்டின் மக்கள் தொகையில் அசாதாரண போக்கைத் தடுக்க “அடிப்படை மாற்றங்களை” கொண்டு வருவதாக தென் கொரியாவின் அரசாங்கம் கூறியுள்ளது.
டிசம்பர் மாதம், ஜனாதிபதி மூன் ஜே-இன் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
2022 ஆம் ஆண்டில் தொடங்கும் இத்திட்டத்தின் மூலம், நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்,செலவுகளை ஈடுகட்ட அந்தந்த குடும்பங்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ரூ. 1.35 லட்சம் வரை வழங்கப்படும்.
குழந்தை ஒரு வயதை எட்டும் வரை,ஒவ்வொரு மாதமும் சுமார் 20,000 ரூபாய் கூடுதலாக செலுத்துப்படும். 2025 க்குப் பிறகு, இந்த ஊக்கத்தொகை ரூ. 34,000 ஆக உயர்த்தப்படும் என்று திட்ட வரைவில் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் தொகை குறைவு மிகவும் ஆபத்தானதா?
ஒரு நாட்டின்,மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கினால்,அது தொழிலாளர் பற்றாக்குறையை உருவாக்கும். மேலும், பொருளாதாரத்தில் பெரும் தீங்கையும் விளைவிக்கும்.
மேலும், மொத்த மக்கள் தொகையில் வயதானவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் போது, உடல்நலம் மற்றும் ஓய்வூதியங்களுக்கான செலவீனங்கள் அதிகரிக்கக்கூடும்.
மறுபுறம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பிறப்பு விகிதங்கள் குறைந்தால் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். அத்தகைய நாடுகளில், சுகாதாரம், கல்வி போன்ற ஏற்கனவே குறைபாடுள்ள பொது சேவைகளுக்கான அணுகலை அனைவருக்கும் உறுதி செய்யப்படும்.
தொழில்மயமான நாடுகளில் மக்கள் தொகை குறைவதினால், உலகளாவிய இடம்பெயர்வுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது என்ற கூற்றும் முன்வைக்கப்படுகிறது.
இதற்கிடையே, வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நாட்டின் தனிநபர் சுகாதார செலவுகள் அதிகரிக்கும் என்ற கூற்றை அதிக எண்ணிக்கையிலான வல்லுநர்கள் நிராகரிக்கவும் செய்கின்றனர். ஏனென்றால், உலகெங்கிலும், ஆயுட்காலத்தை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை தாண்டி, “ஆரோக்கியமான ஆயுட்காலம்” உயர்ந்துள்ளது. எனவே, முன்பை விட மக்கள் அதிக ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் செலவிட்டு வருகின்றனர்.
உலக மக்கள் தொகை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறதா?
2064 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 973 கோடி என்ற உச்சநிலையை அடையும் என்றும், 2100 இல் உலக மக்கள் தொகை 879 கோடியாகக் குறையும் என்றும் கடந்த அண்டு ஜூலை மாதம் லான்செட் நாளிதழில் வெளியான பகுப்பாய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில், மக்கள் தொகை 2048 ஆம் ஆண்டில் 160 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 32 சதவீதம் குறைந்து 2100-ல் 109 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. 2017ல் இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை 138 கோடியாக இருந்தது.
source: https://tamil.indianexpress.com/explained/south-korea-countrys-population-to-decline-south-korea-dwindling-population-impacts/