திங்கள், 11 ஜனவரி, 2021

இடியுடன் கூடிய கனமழை எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை அப்டேட்

 வங்கக்கடலில், இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களிலும்,  இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தேசிய வானிலை முன்னறிவிப்பு முன்னதாக வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தென்கிழக்கு அரபிக் கடல், தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்இந்திய தீபகற்பப் பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி,காரைக்கால், கேரளா, மாஹேவில் வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் பரவலாக மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் ” என்று தெரிவித்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தனது செய்திக் குறிப்பில், “வரும் 10ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை , மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம், மயிலாடுதுறை , திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும் , ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும் .

வரும் 11ம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம், மயிலாடுதுறை , திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்” என்று தெரிவித்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) சுமார் 30% மழையைப் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த பருவ காலத்தில் தமிழ்நாட்டில் 48 சதவீத மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

source: https://tamil.indianexpress.com/tamilnadu/weather-tamil-nadu-imd-report-and-tamil-nadu-weather-forecast-241717/