கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது அனைவரும் அறிந்ததே. இதனால் கடும் விமர்சனத்தை சந்தித்த காங்கிரஸ் கட்சியில், அப்போது தலைவராக இருந்த ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு நிலவியதை தொடர்ந்து, முன்னாள் தலைவர் சோனியாக காந்தி இடைக்காலத்தலைவராக பொறுப்பேற்றார்.
இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தல் தோல்வி காரணமாக கடும் அதிருப்தியடைந்த 23 மூத்த தலைவர்கள் கட்சியில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கோவா சென்று திரும்பிய சோனியா காந்தி, கடிதம் எழுதிய 23 அதிருப்தி தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் மூத்த தலைவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட சோனியா காந்தி விரைவில் சீர்திருத்தம் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களை காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி சந்தித்து ஒரு மாதத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், காங்கிரஸ் கட்சியில் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். ஆனால், அது எப்படி எப்போது நடைபெறும் என்று தெளிவாக குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தீர்வு காண ஒரே வழி “விவசாயிகள் தங்களது உற்பத்திக்காக எம்.எஸ்.பி கொடுக்கும் ஒரு சட்டம் இருக்க வேண்டும். மத்திய விஸ்டா திட்டம், பொருளாதாரத்தின் நிலை, பட்ஜெட் தாக்கல் மற்றும் அடுத்து நான்கு முக்கிய மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் ஆகியவற்றில், தொழில்துறைக்கு அதிகபட்ச ஆதரவு கிடைக்கிறது. ஆனால் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவை மட்டுமே கேட்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ஏன் விவசாயிகள் விரும்பில்லை என்று சிந்திக்காமல் போராட்டத்திற்கு தூண்டுகோலாக செயல்படுகிறது. முழு ஆலோசனையுமின்றி இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் இது ஒரு பிரச்சினையாக வெடித்துள்ளது. மேலும் மக்களுடன் கலந்து ஆலோசிக்காமல் இந்த அரசு தவறான செயல்முறைகளை நிகழ்த்தி வருகிறது. மத்திய அரசு திட்டங்களை மன்னர்கால ஆட்சிபோல கல்லில் தான் பொறிக்கப்படவேண்டும். மத்திய அரசின் இந்த செயல்முறையால், நாங்கள் இடைக்கால இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ளோம், ”என்று தெரிவித்துள்ளார்.
தலைவர் சோனியாகாந்தியுடனான சந்திப்பில், நாங்கள் ஒரு வெளிப்படையான கலந்துரையாடலை நடத்தினோம் என்று நினைக்கிறேன். தலைவர் தேர்தலில், வெளிப்படைத் தன்மையுடன் கட்சிக்கு வழிகாட்டும் காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தேர்தல் எப்பொது எப்படி நடைபெறும், இந்த தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அரசியலமைப்பின் விதிகளுக்கு ஏற்ப தேர்தல்கள் நடத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் நாட்டில் ஒரு அரசியல் சக்தியாக தன்னை புதுப்பித்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. புத்துயிர் பெறுவதற்கான செயல்முறை தொடங்கியுள்ளதாக நான் நினைக்கிறேன். இந்தியாவின் பல மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதைப் உற்றுநோக்க வேண்டும். டெல்லியில், கட்சியின் நிலை குறித்து என்னிடம் மிகுந்த கவலையை வெளிப்படுத்திய பல தலைவர்கள், கட்சி விரைவாக செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அனைத்து காங்கிரஸ்காரர்களும் அந்த அரசியலமைப்பையும் அதன் செயல்முறைகளையும் மதிக்க வேண்டும்.
ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, பொறுப்பேற்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது மாதிரியான சலசலப்புக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மைக்கு மட்டுமே நாங்கள் பதிலளித்து வருகிறோம். ராகுல்காந்தி மீண்டும் தலைவராக வந்தால் மாற்றம் வருமா என்று, “எனக்குத் தெரியாது. இவை அனைத்தும் அரசியலமைப்பின் படி முன்னெடுக்கப்பட்டு வரும் செயல்முறைகள் மற்றும் காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்து முக்கிய நபர்களுடன் கலந்தாலோசிப்பதைப் பொறுத்தது என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.