ஞாயிறு, 31 ஜனவரி, 2021

அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார் ஜெ.பி.நட்டா

 நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் ” எதிர்வரும் காலங்களில் பாஜக, அதிமுக மற்றும் ஒரே மாதிரியான எண்ணங்கள் கொண்ட கட்சிகள் ஒன்றாக தேர்தலை சந்திக்கும்” என்று தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

இன்று (ஜனவரி, 30), காலை மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

பின்னர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்தார். சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், கடந்த முறை சுகாதாரத்துறை அமைச்சராக ஜே.பி.நட்டா இருந்ததால் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்தார்.

 

 

 

ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி. ஆரின் நினைவாக கட்டப்பட்ட கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தற்போது மதுரையில் முகாமிட்டுள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கோயில்  திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா சந்திக்காமல், அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பேசும் பொருளாகி உள்ளது.

இதற்கிடையே, தலைவர் ஜே.பி நட்டாவை ஆர்.பி உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு தனியாக சந்தித்து பேசினர்.  இன்று மட்டும் 3 அதிமுக அமைச்சர்கள் ஜே.பி நட்டாவை சந்தித்துள்ளனர். ஆனால், விஜயபாஸ்கர் தனியாகவும், மற்ற 2 அமைச்சர்கள் தனியாகவும் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

source : https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-national-president-jp-nadda-meets-tamilnadu-health-minister-c-vijayabaskar-in-madurai-244981/