திங்கள், 18 ஜனவரி, 2021

உச்சநீதிமன்ற நிபுணர் குழு: விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முதல்கட்ட கூட்டம்

 மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு தனது முதல் கூட்டத்தை ஜனவரி 19 ஆம் தேதியன்று புது தில்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள பூசா வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் உறுப்பினர் அனில் கன்வத்  தெரிவித்தார்.

மூன்று சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 11 அன்று உத்தரவிட்டது. தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளும், மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு சுமூகத்தீர்வு காண உதவும் வகையில், நிபுணர் குழு ஒன்றையும் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கூற விரும்புவோர் இந்த நிபுணர்குழு முன் ஆஜராகி தெரிவிக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.  இந்த குழு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவோ, யாரையும் தண்டிக்கவோ கூடாது என்றும், தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில்தான் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, இக்குழுவில் இடம் பெற்றிருந்த    மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினரும், அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் (ஏ.ஐ.கே.சி.சி) தற்போதைய தலைவருமான பூபிந்தர் சிங் மான், நிபுணர் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

“ஜனவரி 19 அன்று பூசா வளாகத்தில் முதல்கட்ட கூட்டம் நடிபெரும். எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்ய உறுப்பினர்கள் மட்டுமே கூடுவார்கள் ”என்று ஷேத்கரி சங்கதானா என்ற விவசாயக் குழுவின் தலைவர் அனில் கன்வத் தெரிவித்தார்.

“நால்வரில் குழுவில் ஒருவர் தன்னை விலக்கி கொள்வதாக அறிவித்துவிட்டார். புதிய உறுப்பினரை உச்ச நீதிமன்றம்  நியமிக்கவில்லை என்றால், தற்போதுள்ள உறுப்பினர்கள் தொடருவார்கள்,”என்றும் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் குறித்தும், விவசாயிகளின் போராட்டம் தொடர்பான வழக்கை  உச்சநீதிமன்றம் வரும் திங்களன்று விசாரிக்கும் வேளையில், நிபுணர்கள் குழுவில் கூடுதல் உறுப்பினர் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த 15ம் தேதி  தலைநகர் தில்லியில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற 9வது சுற்று பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. விவசாய சங்கங்கள் தங்களுக்கிடையே சாதரண முறையில் குழுக்கள் அமைத்து தங்களது கோரிக்கைகளை இறுதி செய்யலாம் என்றும் அவற்றை முறைபடியாக அரசுக்கு தெரிவித்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் வேளாண் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்  அறிவித்துள்ளனர்.

source: https://tamil.indianexpress.com/india/sc-appointed-panel-on-farm-laws-to-hold-first-meeting-on-jan-19/