ஞாயிறு, 17 ஜனவரி, 2021

டிஆர்பி முறைகேடு வழக்கு: அர்னாப் கோஸ்வாமியின் 200 பக்க வாட்ஸ்அப் உரையாடல்கள் வெளியானது

 கடந்த ஜனவரி 11ம் தேதி, டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை காவல்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் முன்னாள் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (BARC)  தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா இடையே 200 பக்கங்கள் கொண்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மும்பை காவல்துறையால் தாஸ்குப்தா கைது செய்யப்பட்டு விசாரித்து வரும் நிலையில், இந்த வாட்ஸ்அப் உரையாடல்கள் வெளி வந்திருக்கின்றது.

இந்த உரையாடலில், ” தாஸ்குப்தாவின் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதம மந்திரி அலுவலகம் (பி.எம்.ஓ) உள்ளிட்ட மேல்மட்ட அரசியல் தலைமையுடன் தனக்கு இருந்த நெருக்கத்தையும், அனைத்து அமைச்சர்களும் நம்முடன் தான் இருக்கிறார்கள் என்ற வாசகத்தையும் அர்னாப் கோஸ்வாமி பயன்படுத்தியுள்ளார்.

ஜூலை 2017ல் நடைபெற்ற இருவருக்கும் இடையேயான  உரையாடலின் போது, ‘தாஸ்குப்தா’ பிரத்தியோக தொலைக்காட்சி மதிப்பீடு புள்ளி (டிஆர்பி)  தரவுகளை    கோஸ்வாமிக்கு அனுப்பியுள்ளார். செய்தி பிரிவில்  இரண்டு ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனல்களுக்கான   டிஆர்பி புள்ளிகளை அதிகப்படுத்த கோஸ்வாமி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், தாஸ்குப்தாவுக்கு பணத்தை லஞ்சமாக கொடுத்ததாகவும்  காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

 


தாஸ்குப்தா ஒரு உரையாடலில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆதாரவாக எடுத்த சில நிலைப்பாடுகளைப் பற்றி பேசிய கையேடு, பார்க் கவுன்சிலுக்கு எதிரான சில புகார்களை தடுப்பது தொடர்பாக அர்னாப்  கோஸ்வாமியிடம் பேசுவது போல் உரையாடல் அமைந்திருக்கிறது.  பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்வருவதாக கோஸ்வாமி பதிலளித்தார். பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சர்கள், ‘ஏ.எஸ்’ என்ற முக்கியஸ்தருடன் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார். உரையாடலின் போது, முன்னாள் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பெயரை அர்னாப் கோஸ்வாமி வெளிப்படையாக தெரிவித்தார்.

தர்போது, இந்த உரையாடல் அரசியல் வட்டாரங்களில் கடும் அதிர்வலையை எற்படுத்தியிள்ளது.   இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை. பிரதமர் அலுவலக தகவல் அலுவலர் தீரஜ் சிங்கிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

 


தாஸ்குப்தா உட்பட மூன்று நபர்கள் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நவம்பர் 25 ம் தேதி பதிவு செய்யப்பட்ட முந்தைய குற்றப்பத்திரிகையில் டிஆர்பி மோசடி தொடர்பாக 12 நபர்கள் மற்றும் ஆறு சேனல்கள் பெயரிடப்பட்டன. தாஸ்குப்தா, ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க் தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் காஞ்சந்தானி, பார்க் முன்னாள் தலைமை இயக்க அதிகாரி ரோமில் ராம்கரியா ஆகியோர் இந்த வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, ஜாமீன் மனுவை  மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், தாஸ்குப்தா மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு வரும்  செவ்வாய்க்கிழமையன்று  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

டைம்ஸ் நவ் என்ற நிறுவனத்தில் கோஸ்வாமி,  தாஸ்குப்தா இருவரும் ஒன்றாக பணிபுரிந்த காலத்தில் இருந்து  இருவருக்கும் இடையேயான தொடர்பு நீடித்து வருகிறது.

 

 

 

தாஸ்குப்தா  வழக்கறிஞர் அர்ஜுன் சிங் தாக்கூர் கூறுகையில், “ பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான, உள்நோக்கத்துடன் வாட்ஸ்அப் அரட்டைகளை மும்பை காவல்துறை கசியவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு தொடர்புடைய எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை. இருவரும், தொழில்முறை சார்ந்த விசயங்களை பேசியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

அர்னாப் கோஸ்வாமியின் சட்டக் குழு இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

விசாரணை முடிக்கி விடப்பட்டிருப்பதாகவும், இரண்டாவது துணை குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும்  மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/india/arnabgate-whatsapp-chats-between-arnab-and-ex-barc-chief-leaked-242772/