தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (செவ்வாய் கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.
சென்னை ஷெனாய் நகரில் உள்ள திருவிக மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், ” அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும். உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவர்” என்று தெரிவித்தார்.
மேலும், மருத்துவக் குழுவினர் ஒருவார காலத்திற்குள் மாணாக்கரை பரிசோதனை செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, திருச்சி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பை கண்காணிக்க 167 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு உறுப்பினர்கள் தலா 3 பள்ளிகள் வீதம் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பள்ளிகள் மீண்டும் செயல்படுவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட உத்தரவில், ” பள்ளிகளில் ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மிகாமல் அமர்ந்திருக்கவும், கோவிட்-19-க்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படவும் அனுமதி அளிக்கப்படுவதாகவும், அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.