வியாழன், 21 ஜனவரி, 2021

NEET 2021-ல் என்ன மாற்றம்? சிலபஸ் மாறாது; சாய்ஸ் உண்டு

 Syllabus of NEET 2021 Exam to remain unchanged :  நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள் கோரிக்கை வைத்த நிலையில், நீட் தேர்வுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் அறிவித்தார்.

இருப்பினும், 2021 நீட் (இளங்கலை) தேர்வுத் தாளில் ஜேஇஇ (மெயின்) தேர்வைப் போன்று வினாக்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு (இன்டர்னல் சாய்ஸ் ) மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய கல்வி அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” 2021 ஆம் ஆண்டு நீட் (இளங்கலை) தேர்வுக்கான தேர்வு மாதிரி ( Exam Pattern) இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள சில வாரியங்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, 2021 நீட் (இளங்கலை) தேர்வுத் தாளிலும் ஜேஇஇ (மெயின்) தேர்வைப் போன்று வினாக்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும்” என்று தெரிவித்தது.

ஜேஇஇ தேர்வை பொறுத்த வரையில் மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல, கணிதத்தில் தலா 30 கேள்விகள்) ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல், கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும். எனவே, இதுபோன்ற ஒரு முறை இந்த ஆண்டு நீட் தேர்வில் அறிமுகப்படுத்தப்படலாம்.

2020-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ (மெயின்) தேர்வில், கேட்கப்பட்ட அனைத்து 75 கேள்விகளுக்கும் (இயற்பியியல், வேதியியல், கணிதத்தில் தலா 25 கேள்விகள்) மாணவர்கள் விடையளிக்க வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.