புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் – விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற ஏழாவது சுற்று பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. சர்ச்சைக்குரிய 3 சட்டங்களை ரத்து செய்யப்போவதில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. மேலும், இந்த விஷயத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல குழு ஒன்றை மத்திய அரசு பரிந்துரைத்ததாக நம்பப்படுகிறது. விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் நிலையாக இருந்தனர்.
40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே, வர்த்தக மற்றும் உணவு அமைச்சர் பியூஷ் கோயல், பஞ்சாப் பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணை அமைச்சருமான சோம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்றைய பேச்சு வார்த்தையிலும், டெல்லியின் போராட்டத்தளத்தில் உள்ள சமுதாய சமையல் கூடத்தில் (லங்கர்) இருந்து விவசாயிகளின் பிரதிநிதிகள், உணவைக் கொண்டு வந்தனர். முந்தைய சுற்று பேச்சுவார்த்தைகளைப் போல், உணவு இடைவெளியின் போது, மத்திய அமைச்சர்கள் விவசாய பிரதிநிதிகளுடன் சேர்ந்து உணவு அருந்தவில்லை.
சென்ற மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற ஆறாவது சுற்று பேச்சுவார்த்தையில் விவசாய சங்க பிரதிநிதிகள் முன்வைத்த நான்கு பிரச்சினைகளில் சுற்றுச்சூழல் தொடர்பான அவசர சட்டம், மின்சார சட்டம் ஆகியவற்றில் பொது கருத்து எட்டப்பட்டதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார். இன்றைய பேச்சுவார்த்தையில், எஞ்சியுள்ள இரண்டு பிரச்சினைகள் குறித்து சுமூகமான தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முன்னதாக, இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஹரியானாவில் உள்ள அனைத்து மால்கள், பெட்ரோல் பம்புகளை முடக்கி போராட்டத்தை தீவிரப்படுத்த இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன. “எங்கள் கோரிக்கைகள் அப்படியே இருக்கின்றன. மூன்று புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். எங்களது, கோரிக்கைகளை மத்திய அரசு திறந்து மனதுடன் கேட்கும் வரை போராட்டங்கள் தொடரும் ”என்று பாரத் கிசான் யூனியன் உறுப்பினர் ஜாகீர் சிங் தலேவால் கூறினார்.