புதன், 13 ஜனவரி, 2021

வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு

 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராடிவரும் நிலையில், மறு உத்தரவு வரும்வரை 3 புதிய வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் 1 மாதத்துக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், மத்திய அரசு, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து வருகிறது.

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு விவசாயிகளுடன் இதுவரை நடத்திய 7 கட்ட பேச்சுவார்த்தைகளிலும் முடிவுகள் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாகவும் பல்வேறு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் அமர்வு முன்பு நேற்று (ஜனவரி 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகளுடனான மத்திய அரசின் பேச்சுவார்த்தைகளில் உச்ச நீதிமன்றம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. அதோடு, குழு அமைத்து பேச்சுவார்த்தைக்கான சூழலை எளிதாக்கவும் நிலைமையை சரிபடுத்தவும் வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறியது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை நிறுத்தாவிட்டால், உச்ச நீதிமன்றம் நிறுத்தும் என்று தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் அந்த வழக்குகளை இன்று (ஜனவரி 12) மீண்டும் விசாரித்தது. அப்போது, 3 புதிய வேளாண் சட்டங்களையும் அமல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், மறு உத்தரவு வரும்வரை இந்த உத்தரவு தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் ஒரு சிறப்பு குழுவினை அமைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் அடங்கிய உத்தரவிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் முன்மொழிந்த குழுவில், பாரதிய கிசான் சங்கத் தலைவர் ஜிதேந்தர் சிங் மன், வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி, அனில் தன்வத், தெற்காசியாவின் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பிரமோத் கே. ஜோஷி ஆகியோர் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


Source: https://tamil.indianexpress.com/tamilnadu/supreme-court-suspends-implementation-of-three-farm-laws-until-further-notice-242100/