இந்தியாவின் தேசிய கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி இன்று தனது செயற்குழு (சி.டபிள்யூ.சி) கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில், விவசாயிகளின் போராட்டம், கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ்அப் பதிவுகள் கசிந்தது உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மூன்று பிரச்சினைகள் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றியது. மேலும் வரும் ஜூன் 2021 க்குள் காங்கரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின், சார்பில், மதுசூதன் மிஸ்திரி கூறுகையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக சி.டபிள்யூ.சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தில், மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் குறுகிய காலத்தில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தையும் கட்சி ஏற்றுக்கொண்டது.
ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர் தலைமை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் (பார்க்) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா ஆகியோருக்கு இடையிலான வாட்ஸ்அப் உரையாடல்கள் குறித்து நாடாளுமன்றக் குழு விசாரணை கோரியது. மேலும் இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி, பல விஷயங்கள் தொடர்பாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார். இதில் பாராளுமன்றத்தின் வரவிருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய “பொது அக்கறையின் பல முக்கிய பிரச்சனைகள்” இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் குறித்து , அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தை அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த மூன்று வேளாண் சட்டங்களும் அவசரமாக உருவாக்கப்பட்டது என்பதும், அவற்றின் தாக்கங்கள் விரைவில் வெளிப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், அர்த்தமுள்ள விவரங்களை ஆராய்வதற்கான வாய்ப்பை பாராளுமன்றம் மறுத்தது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இந்த மூன்று வேளாண் சட்டங்களும், உணவுப் பாதுகாப்பின் அடித்தளங்களை அழிக்கும் என்பதால் அவற்றை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம், ”என்று அவர் கூறினார்.
ரிபப்ளிக் டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் (பார்க்) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா இடையே கூறப்படும் வாட்ஸ்அப் உரையாடல்களில், தேசிய பாதுகாப்பு எப்படி “முழுமையாக சமரசம் செய்யப்பட்டது” என்பது குறித்து “மிகவும் குழப்பமான” அறிக்கைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் “சில நாட்களுக்கு முன்பு, அந்தோனி-ஜி இராணுவ நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ ரகசியங்களை கசியவிடுவது தேசத்துரோகம் என்று கூறியிருந்தார்.
ஆனால் மற்றவர்களுக்கு தேசபக்தி மற்றும் தேசியவாத சான்றிதழ்களை வழங்குபவர்கள் இப்போது அவர்களின் தவறுகள் முற்றிலும் அம்பலமாக உள்ளது ”என்று அவர் கூறினார். இதனையடுத்து கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய அவர், முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளனர். இந்த செயல்முறை “முழு அளவிற்கு” முடிக்கப்படும் என்று காங்கிரஸ் நம்புகிறது. கொரோனா தொற்றுநோயை தடுப்பதில் கவனத்தை சிதறவிட்ட மத்திய அரசு, நாட்டின் மக்களுக்கு சொல்லமுடியாத துன்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த காயங்கள் குணமடைய பல ஆண்டுகள் ஆகும், ”என்று அவர் கூறினார்.
மேலும் இந்த கொரோனா தொற்று பாதிப்பினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.எம்.இ மற்றும் முறைசாரா துறைகள் போன்ற பொருளாதாரத்தின் பெரும் பகுதிகள் “அழிந்துவிட்டன” என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
source: https://tamil.indianexpress.com/india/national-congress-executive-meeting-important-resolutions-243729/